கைது செய்யப்பட்ட பெண் மாவோயிஸ்டு ஸ்ரீமதி கோவை கோர்ட்டில் ஆஜர் - 26-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு


கைது செய்யப்பட்ட பெண் மாவோயிஸ்டு ஸ்ரீமதி கோவை கோர்ட்டில் ஆஜர் - 26-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு
x
தினத்தந்தி 12 March 2020 10:15 PM GMT (Updated: 2020-03-13T01:01:16+05:30)

கைது செய்யப்பட்ட பெண் மாவோயிஸ்டு ஸ்ரீமதி கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 26-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை,

கோவையை அடுத்த மாங்கரை சோதனைச்சாவடி வழியாக செல்லும் அரசு பஸ்சில் கேரள போலீசாரால் தேடப்படும் பெண் மாவோயிஸ்டு ஸ்ரீமதி என்பவர் கர்நாடகாவில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு தப்பி செல்வதாக கோவை கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை 5.30 மணியள வில் மாங்கரை சோதனைச்சாவடி வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதிலும் குறிப்பாக பஸ்சில் வருபவர்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ்சில் ஸ்ரீமதி (வயது 25) என்ற பெண் மாவோயிஸ்டு வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து ஜீப்பில் ஏற்றி ரகசிய இடத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் கியூ பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

விசாரணை முடிந்த பின்னர் நேற்று மதியம் ஸ்ரீமதியை கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். இதைத்தொடர்ந்து ஸ்ரீமதியை வருகிற 26-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார். அதன்பேரில் ஸ்ரீமதியை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கோவை சிறையில் அடைத்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

கோவை அருகே கேரள போலீசாரால் தேடப்படும் பெண் மாவோயிஸ்டு ஸ்ரீமதி பஸ்சில் கேரளாவுக்கு தப்பி செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து சென்று சோதனை நடத்தியபோது அந்த பெண் ஸ்ரீமதி தானா என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து கேரள போலீசாருடன் ஆலோசனை நடத்தி, அந்த பெண் தான் ஸ்ரீமதி என்பதை உறுதி செய்தோம்.

ஸ்ரீமதியுடன் கூட்டாளிகள் யாரும் பஸ்சில் வரவில்லை. வழக்கமாக மாவோயிஸ்டுகள் தப்பிச் செல்லும் போது அவர்களுடன் பாதுகாப்புக்காக வேறு யாராவது வருவது வழக்கம். ஆனால் ஸ்ரீமதியுடன் வேறு யாரும் வரவில்லை என்றாலும் போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக வேறு நபர் அந்த பஸ்சில் வந்திருக்கலாம். அது தெரியவில்லை.

ஸ்ரீமதிக்கு, ஷோபா, கவிதா என பல பெயர்களும் இருப்பதாக கூறப்படு கிறது. அதுபற்றி உறுதியான தகவல் இல்லை. கடந்த ஆண்டு மாவோயிஸ்டுகளுக்கும், கேரள போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஸ்ரீமதி குண்டு காயத்துடன் தப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் விசாரணை நடத்த கேரள போலீசார் விரைவில் கோவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்து அழைத்து செல்வார்கள் என்று தெரிகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story