தலையில் கல்லைப்போட்டு 2 வாலிபர்களை கொன்ற வழக்கில் 4 பேர் கைது

பொன்னேரி அடுத்த ஆலாடு கிராமத்தில் 2 பேர் மீது கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி,
பொன்னேரி அருகே வேண்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர்கள் வீரா (வயது 28), சுதாகர் (24). இருவரும் நண்பர்கள். இவர்கள் கடந்த 8-ந் தேதி ஆலாடு கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மைதானத்தில் கைப்பந்து விளையாடி கொண்டிருந்தவர்களுக்கும் வீரா, சுதாகர் ஆகியோருக்கும் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது.
வீரா, சுதாகர் ஆகியோரை தாக்கி தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர். இதுகுறித்து பொன்னேரி போலீஸ் உதவி கண்காணிப்பாளர் பவன்குமார்ரெட்டி உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
4 பேர் கைது
இந்த கொலை வழக்கில் ஆலாடு பெரிய காலனியை சேர்ந்த சுகன் (22), தீபன் (22), ரஞ்சித் (22), ஜெயபிரகாஷ் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், காதல் விவகாரத்தில் முன்விரோதம் இருந்து வந்ததாகவும் இதனால் வீரா மற்றும் சுதாகரை கொலை செய்தோம் என அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து பொன்னேரி குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. தனிப்படை போலீசார் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story