கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கை: கைகளை 30 வினாடிகள் சோப்பு போட்டு கழுவ வேண்டும் உணவு பாதுகாப்புத்துறை அறிவுரை


கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கை:   கைகளை 30 வினாடிகள் சோப்பு போட்டு கழுவ வேண்டும்   உணவு பாதுகாப்புத்துறை அறிவுரை
x
தினத்தந்தி 13 March 2020 10:00 PM GMT (Updated: 2020-03-14T01:48:06+05:30)

கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு முறையும் கை கழுவ குறைந்தபட்சம் 30 வினாடிகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

சென்னை, 

தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சென்னை தியாகராயநகரில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஏ.சதாசிவம் தலைமையிலான குழுவினர் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவவேண்டும் என்றும், ஒவ்வொரு முறையும் கை கழுவ குறைந்தபட்சம் 30 வினாடிகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. தும்மல் மற்றும் இருமல் சமயங்களில் கைக்குட்டை பயன்படுத்த வேண்டும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது. இதுதொடர்பான துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து அருகில் இருந்த ஓட்டல் ஒன்றில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பிரதிநிதிகள், தமிழ்நாடு ஓட்டல் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் கைகள் அடிக்கடி படும் மேஜை, படிக்கட்டின் ஓரங்கள், ஜன்னல் கம்பிகள் போன்ற இடங்களில் கிருமி நாசினிகள் தெளிக்க வேண்டும் என்றும், அடிக்கடி தரையை ‘மாப்’ போட்டு துடைக்கவேண்டும் என்றும், கழிவறைகளையும் தூய்மையாக வைக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

Next Story