பொங்கலூர் அருகே வங்கி கொள்ளை வழக்கில் பெங்களூருவை சேர்ந்த 2 பேர் கைது - 85 பவுன் நகை பறிமுதல்


பொங்கலூர் அருகே வங்கி கொள்ளை வழக்கில் பெங்களூருவை சேர்ந்த 2 பேர் கைது - 85 பவுன் நகை பறிமுதல்
x
தினத்தந்தி 13 March 2020 10:15 PM GMT (Updated: 13 March 2020 9:52 PM GMT)

பொங்கலூர் அருகே வங்கி கொள்ளை வழக்கில் பெங்களூருவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 85 பவுன்நகை பறிமுதல் செய்யப்பட்டது.

பொங்கலூர், 

திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த கள்ளிப்பாளையத்தில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கிக்கு கடந்த மாதம் 23-ந் தேதி இரவு ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் வங்கியின் லாக்கர்கள் மற்றும் பாதுகாப்பு பெட்டகங்களை உடைத்து அதில் இருந்த 1000 பவுனுக்கு அதிகமான நகை மற்றும் ரூ.19 லட்சத்து 83 ஆயிரம் பணத்தையும் கொள்ளை அடித்துச்சென்றனர்.

இந்த கொள்ளை சம்பவத்தின்போது கொள்ளையர்கள் தங்களை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்க வங்கியின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்தும், காட்சிகள் பதிவாகும் ஹார்டு டிஸ்க்கையும் எடுத்துச்சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வங்கியின் மேலாளர் சிவராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து வங்கி கொள்ளையை துப்பு துலக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தங்கி, வங்கி கொள்ளை குறித்து துப்பு கிடைக்குமா? என்று கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி விமான நிலையத்தில் அரியானா மாநிலத்தில் நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கி கொள்ளையில் தொடர்புடைய அரியானா மாநிலத்தை சேர்ந்த அனில்குமார் என்கிற அனில்சிங் (வயது35) என்ற கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் அரியானா மாநில போலீசார் நடத்திய விசாரணையில், தனது நண்பர்கள் இஷார்கான் மற்றும் கஜராஜ் ஆகியோருடன் சேர்ந்து தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் கள்ளிப்பாளையத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் கொள்ளையில் ஈடுபட்டதாகவும், கொள்ளையடித்த நகை மற்றும் பணத்தை இஷார்கான் மற்றும் பெங்களூருவை சேர்ந்த ராமன்ஜீ அப்பா(35) மற்றும் ராமகிருஷ்ண ஆச்சார்யா(32) ஆகியோரிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான தனிப்படை போலீசார் டெல்லி சென்று கொள்ளையன் அனில்சிங்கை ரெயில் மூலம் பலத்த பாதுகாப்புடன் தமிழகம் அழைத்து வந்தனர். பின்னர் கொள்ளையன் அனில்சிங்கை போலீசார் பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி உதயசூரியா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து விசாரணை முடிந்தும், அவரை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில்அடைத்தனர்.

இதற்கிடையில் அனில் சிங் கூறிய தகவலின் பேரில் அவரது கூட்டாளியான இஷார்கான்(34) என்பவரை அவினாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மாநிலத்தில் கைது செய்தனர். மேலும் இஷார்கானிடம் இருந்து ரூ.11 லட்சத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை அந்த மாநில கோர்டில் ஆஜர்படுத்திய பின் தமிழகத்திற்கு கொண்டு சென்று விசாரிக்க அனுமதி கேட்டனர். அங்கு அனுமதி கிடைத்ததை தொடர்ந்து தனிப்படை போலீசார் இஷார்கானை தமிழ் நாட்டிற்கு ரெயிலில் அழைத்து வருகிறார்கள்.

மேலும் அனில்சிங் கூறிய தகவல்படி நகைகளை வைத்து இருந்த பெங்களூருவை சேர்ந்த ராமன்ஜீ அப்பா மற்றும் ராமகிருஷ்ண ஆச்சார்யா ஆகிய இருவரையும் சேலம் கொண்டலாம் பட்டியில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 85 பவுன் நகை மற்றும் ரூ. 1லட்சத்து 50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இவர்கள் இருவரையும் பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வங்கி கொள்ளை வழக்கில் இதுவரை மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான கஜராஜை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Next Story