கொரோனா வைரஸ் எதிரொலி: கேரளாவுக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் குறைந்தது - பஸ்களில் கிருமி நாசினி தெளிப்பு


கொரோனா வைரஸ் எதிரொலி: கேரளாவுக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் குறைந்தது - பஸ்களில் கிருமி நாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 13 March 2020 11:00 PM GMT (Updated: 2020-03-14T04:45:44+05:30)

கொரோனா வைரஸ் எதிரொலியாக கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் குறைந்தது. பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

கோவை,

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டு பலர் இறந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் மருத்துவ குழுக்கள் முகாமிட்டு, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணித்து வருகிறார்கள்.

அவ்வாறு வரும் பயணிகளை பரிசோதனை செய்யும் போது காய்ச்சல் அதிகமாக இருந்தால் அவர்கள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி மற்றும் மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன் குமார் ஜடாவத் ஆகியோரின் உத்தரவின்பேரில் மாநகர பகுதியில் மாநகராட்சி ஊழியர்களும், புறநகர் பகுதியில் சுகாதாரத்துறை ஊழியர்களும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். கேரளாவில் கொரோனா வைரஸ் தவிர பறவை காய்ச்சல், குரங்கு காய்ச்சலும் தீவிரமாக பரவி வருகிறது.

அந்த வகையான காய்ச்சல் கோவையில் பரவுவதை தடுக்க கேரளாவில் இருந்து கோவை வரும் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பஸ்களின் டயர், இருக்கைகள் மற்றும் பஸ்கள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் பஸ்களின் கைப்பிடிகளும் கிருமி நாசினி மூலம் துடைக்கப்படுகிறது. அத்துடன் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு நோட்டீஸ்களும் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் கோவையில் இருந்து கேரளா செல்லும் பஸ்களில் பயணிகளின் கூட்டம் குறைந்து உள்ளது. இதனால் உக்கடம் மற்றும் காந்திபுரம் பஸ்நிலையத்தில் கேரள பஸ்கள் நிற்கும் இடத்தில் பயணிகளின் எண் ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதுபோன்று ரெயில் மூலம் கேரளா செல்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறது.

குறிப்பாக போத்தனூர் ரெயில் நிலையத்தில் கேரளா செல்ல பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பீதி காரணமாக அந்த ரெயில் நிலையம் வெறிச்சோடி கிடக்கிறது. பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்பவர்கள் கூட முன்னெச்சரிக்கையாக முக கவசம் அணிந்து செல்வதை காண முடிகிறது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தனியார் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள், அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகள், தியேட்டர்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சம்பந்தப்பட்ட துறையினர் கிருமி நாசினியை தெளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. ஓட்டல்கள் மற்றும் மருத்துவமனைகளில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் இருந்தால் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

விழிப்புணர்வு காரணமாக பொதுமக்களில் பலர் முக கவசம் அணிந்து செல்வது அதிகரித்து உள்ளது. கோவை மாநகராட்சியில் மட்டும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக 800 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு வேலை செய்து வருகிறார்கள். அதை அதிகாரிகள் குழுவினரும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

பொதுமக்கள் அதிகம் கூடும் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடைமுறைகளை பின்பற்றா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story