சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து: காய்கறி மூட்டைகளுக்குள் சிக்கிய தொழிலாளி உடல் நசுங்கி பலி - டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம்


சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து: காய்கறி மூட்டைகளுக்குள் சிக்கிய தொழிலாளி உடல் நசுங்கி பலி - டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 13 March 2020 10:00 PM GMT (Updated: 2020-03-14T04:45:47+05:30)

பழனியில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காய்கறி மூட்டைகளுக்கு இடையே சிக்கி தொழிலாளி உடல் நசுங்கி பலியானார். டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பழனி, 

பழனியில் இருந்து காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று நேற்று முன்தினம் இரவு ஒட்டன்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. வேனை ஒட்டன்சத்திரம் அரசபிள்ளைப்பட்டியை சேர்ந்த கார்த்திகைவேல் (வயது 38) என்பவர் ஓட்டினார். வேனின் பின்பகுதியில் அடுக்கி வைக்கப்பட்ட மூட்டைகளின் மேல், சுமைதூக்கும் தொழிலாளர்களான இடையக்கோட்டை கல்லுப்பட்டியை சேர்ந்த பெருமாள் (36), பலக்கனூத்தை சேர்ந்த சண்முகவேல் (38), பூபதி (40) ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

பழனி அரசு அலுவலர் குடியிருப்பு அருகில் உள்ள போலீஸ் சோதனை சாவடி பகுதியில் வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடியது. ஒருகட்டத்தில் அந்த சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனின் பின் பகுதியில் அமர்ந்திருந்த 3 தொழிலாளர்கள் மீது காய்கறி மூட்டைகள் விழுந்தது. இதில் மூட்டைகளுக்குள் சிக்கிய பெருமாள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். டிரைவர் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தை கண்டதும் அவ்வழியே சென்றவர்கள் உடனடியாக ஆயக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகஅனுப்பினர்.

இதற்கிடையே படுகாயம் அடைந்த பூபதி, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story