பேராசிரியர்களை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் தர்ணா


பேராசிரியர்களை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் தர்ணா
x
தினத்தந்தி 13 March 2020 10:15 PM GMT (Updated: 13 March 2020 11:15 PM GMT)

பேராசிரியர்களை கைது செய்யக்கோரி தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை விளார் சாலையில் உள்ள அண்ணாநகர் 9-வது தெருவை சேர்ந்தவர் முகமதுஹனீபா. இவருடைய மகன் மீராமைதீன் (வயது21). இவர் தஞ்சையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், மாணவிகளுடன் விளையாடிக்கொண்டு இருந்ததை பார்த்த பேராசிரியையும், துறை தலைவரும் மீரா மைதீனை கண்டித்தனர்.

இதனால் அவர் எலி பேஸ்டை(வி‌‌ஷம்) தின்றுவிட்டார். இதையடுத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார், மாணவரை திட்டி தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியை சங்கீதா, துறைத்தலைவர் மகே‌‌ஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் பேராசிரியை சங்கீதா, துறைத்தலைவர் மகே‌‌ஷ் ஆகிய 2 பேரையும் உடனே கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கல்லூரி நுழைவு வாயில் அருகே நேற்று மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் மாணவர்கள் சிலரை போலீசார் அழைத்து சென்று கல்லூரி நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேராசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசாரும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமாட்டோம் என கல்லூரி நிர்வாகத்தினரும் உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story