நாமக்கல் அருகே லாரி-கார் மோதி கோர விபத்து: பலியான 6 பேர் அடையாளம் தெரிந்தது பரபரப்பு தகவல்கள்


நாமக்கல் அருகே லாரி-கார் மோதி கோர விபத்து: பலியான 6 பேர் அடையாளம் தெரிந்தது பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 15 March 2020 12:00 AM GMT (Updated: 14 March 2020 4:44 PM GMT)

நாமக்கல் அருகே லாரி-கார் மோதிய விபத்தில் பலியான 6 பேர் அடையாளம் தெரியவந்தது.

நாமக்கல்,

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் ஜரிலால்தாஸ். இவரது மகன்கள் தர்மா (வயது 40), பப்லு (30). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளர்கள். நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் டைல்ஸ் ஒட்டும் பணியை தர்மா ஒப்பந்தம் எடுத்து செய்து வந்தார். இதற்காக பீகார் மாநிலத்தை சேர்ந்த பேச்சான்குமார் (35), ஜித்தேந்திரன் (20) ஆகியோரையும் அழைத்து வந்து இருந்தார்.

இவர்கள் அனைவரும் நாமக்கல் அருகே உள்ள செல்லப்பா காலனியில் ஒரு வீடு எடுத்து தங்கி தினசரி பணிகளை செய்து வந்தனர். நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பகுதியில் ஒரு வீட்டில் டைல்ஸ் ஒட்டுவதற்கு சென்றனர். இவர்களுடன் செல்லப்பா காலனியை சேர்ந்த சதீஷ்குமார் (38) என்பவரும் உடன் சென்று இருந்தார். இவர்கள் ஒரு காரில் சென்றனர். இந்த காரை செல்லப்பா காலனியை சேர்ந்த சசிகுமார் (28) ஓட்டிச்சென்றார்.

6 பேர் சாவு

இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு டைல்ஸ் ஒட்டும் பணியை முடித்து கொண்டு ஒரு காரில் நாமக்கல் நோக்கி வந்து கொண்டு இருந்தனர். இரவு 10.30 மணி அளவில் கார் நாமக்கல் அருகே உள்ள சின்னவேப்பனம் பகுதியில் வந்தபோது எதிரே செங்கல் பாரம் ஏற்றி வந்த லாரியும், காரும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதி கொண்டன.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த தர்மா, பப்லு, பேச்சான்குமார், ஜித்தேந்திரன், சதீஷ்குமார் மற்றும் டிரைவர் சசிகுமார் ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற நாமக்கல் போலீசாரும், தீயணைப்பு படையினரும் சுமார் 1 மணி நேரம் போராடி 6 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை

இதற்கிடையே 6 பேரின் உடல்களும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. பின்னர் செல்லப்பா காலனியை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் சசிகுமாரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல் பீகார் மாநிலத்தை சேர்ந்த 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சவக்கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளது. பீகாரில் உள்ள அவர்களின் உறவினர்களுக்கு நாமக்கல் போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர். அவர்கள் வந்தவுடன் 4 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

லாரி டிரைவருக்கு வலைவீச்சு

இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் லாரி மற்றும் கார் டிரைவர்கள் அதிக வேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்தது. தலைமறைவான சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story