மக்களுக்கு நல்லது செய்ய ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் முன்னாள் இந்திய அழகி அனுகீர்த்திவாஸ் பேட்டி


மக்களுக்கு நல்லது செய்ய ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் முன்னாள் இந்திய அழகி அனுகீர்த்திவாஸ் பேட்டி
x
தினத்தந்தி 15 March 2020 6:00 AM IST (Updated: 15 March 2020 12:08 AM IST)
t-max-icont-min-icon

மக்களுக்கு நல்லது செய்ய ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று முன்னாள் இந்திய அழகி அனுகீர்த்திவாஸ் தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சி ஓட்டல் ஒன்றில் நேற்று பெண்கள் ரோட்டரி சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து மகளிர் தின விழா கொண்டாடினர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி காட்டூரை சேர்ந்த முன்னாள் இந்திய அழகி அனுகீர்த்திவாஸ் பங்கேற்று பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

2018-ம் ஆண்டு நான், பெமினா இந்திய அழகியாக தேர்வு பெற்றேன். சொந்த ஊர் திருச்சி காட்டூர். தற்போது சென்னையில் குடும்பத்துடன் குடியேறி விட்டேன். இந்திய அழகியாக தேர்வு பெற்றதையொட்டி, தற்போது 2 சினிமா படங்களில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வில்லை.

கொரோனா விழிப்புணர்வு

தற்போது கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. எனவே, அனைவரிடமும் விழிப்புணர்வும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்வது அவசியம். தொடர்ந்து பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும் நான் பாடுபடுவேன். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதுபோல அனைத்து துறைகளிலும் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளது. பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்கள் மீது, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் தண்டனை கடுமையாக இருப்பதுடன் உடனடியாக வழங்கப்பட்டு விடுகிறது. இதனால், அங்கு தப்பு செய்யவே பயப்படுகிறார்கள். இந்தியாவில் அதுபோன்ற கடுமையான தண்டனை சட்டம் இல்லாததால் பெரிய பெரிய ஆட்கள் தப்பு செய்து விட்டு எளிதாக, தப்பி விடுகிறார்கள். நிர்பயா வழக்கில், குற்றவாளிக்கு தண்டனை அறிவித்தாலும் அது நிறைவேற்றப்படாமல் காலதாமதப்படுத்தப்பட்டு வருகிறது.

ரஜினிகாந்த் அரசியலுக்கு...

தமிழக அரசியலை பொறுத்தவரை, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவைபோல ஆளுமை திறன்மிக்கவர்கள் யாரும் இல்லை. அவர் மறைந்தாலும் இன்னமும் அவரை பற்றி நாம் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். அவரைப்போன்ற பெண்கள் அரசியலில் உருவாக வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய ஆளுமை திறன்மிக்க ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும். இதேபோல் மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மேலும் இன்றைய இளம் தலைமுறையினர் அரசியலுக்கு ஆர்வமாக வரவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக விழாவில் அனுகீர்த்திவாஸ் கவுரவிக்கப்பட்டார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.


Next Story