வேளாண்மைதுறை திட்டங்கள் பெரும்பாலான விவசாயிகளை சென்றடையவில்லை சப்-கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் குற்றச்சாட்டு


வேளாண்மைதுறை திட்டங்கள் பெரும்பாலான விவசாயிகளை சென்றடையவில்லை சப்-கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 March 2020 4:15 AM IST (Updated: 15 March 2020 1:37 AM IST)
t-max-icont-min-icon

வேளாண்மை துறை திட்டங்கள் பெரும் பாலான விவசாயிகளை சென்றடையவில்லை என்று சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கள்ளக்குறிச்சி வேளாண்மை உதவி அலுவலர் சிவா, ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பேசியதாவது:-

வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை ஆகிய துறைகளின் முலம் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் பெரும்பாலான விவசாயிகளை சென்றடையவில்லை. சில விவசாயிகள் மட்டுமே பயன் அடைந்துள்ளனர். எனவே அரசின் திட்டங்கள் அனைத்து விவசாயிகளையும் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். பூட்டை ஏரிப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினார்கள். இந்த கூட்டத்தில் உதவி மின்பொறியாளர் தமிழரசன், இளநிலை மின் பொறியாளர் அழகன், தோட்டக்லைத்துறை உதவி அலுவலர்கள் தனசேகர், ரவி மற்றும் விவசாயிகள் நாராயணன், ஆதிமுலம், சக்திவேல், அருள் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story