சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள் மாடுகள் முட்டியதில் 30 பேர் காயம்


சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள் மாடுகள் முட்டியதில் 30 பேர் காயம்
x
தினத்தந்தி 15 March 2020 12:00 AM GMT (Updated: 14 March 2020 8:12 PM GMT)

ஏத்தாப்பூரில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக காளைகள் சீறிப்பாய்ந்தன. அப்போது, மாடுகள் முட்டியதில் 30 பேர் காயம் அடைந்தனர்.

பெத்தநாயக்கன்பாளையம்,

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஏத்தாப்பூரில் ஜல்லிக்கட்டு விழா நேற்று கோலாகலமாக நடந்தது. சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1056 காளைகள் போட்டியில் பங்கேற்பதற்காக மாட்டின் உரிமையாளர்கள் கொண்டு வந்து பதிவு செய்தனர்.

அந்த மாடுகளுக்கு நோய் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பரிசோதனை செய்தனர். இதேபோல், மாடுபிடி வீரர்களில் 600 பேர் பதிவு செய்திருந்தனர். காளைகள் களத்துக்கு செல்வதற்கு வசதியாகவும், இதை பார்க்க பார்வையாளர்களுக்கு வசதியாகவும் இரண்டு அடுக்கு தடுப்புவேலி அமைக்கப்பட்டு இருந்தது.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

இதையடுத்து சரியாக காலை 8.45 மணிக்கு மாவட்ட கலெக்டர் ராமன், போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், எம்.எல்.ஏ.க்கள் சின்னதம்பி, மருதமுத்து தலைமையில் மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பின்னர், ஜல்லிக்கட்டு விழாவை கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து வாடிவாசல் வழியாக கோவில் காளை முதலில் அவிழ்த்துவிடப்பட்டது. பின்னர், மற்ற காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது.

மல்லுக்கட்டிய வீரர்கள்

இதனைத்தொடர்ந்து வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டியதை காணமுடிந்தது. ஆனால் பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரர்களின் கையில் சிக்காமல் திமிறிக்கொண்டு ஓடின. சில இளைஞர்கள் காளைகளின் திமிலை பிடித்துக்கொண்டு சற்று தூரம் சென்றனர். மேலும், சில காளைகள் துள்ளிக் குதித்தபடி வீரர்களை முட்டி தள்ளி விட்டு ஆக்ரோஷமாக ஓடியதை காணமுடிந்தது.

இதையடுத்து துள்ளி குதித்த காளைகளை, அங்கிருந்த காளையர்கள் அடக்கி பிடித்ததற்காகவும், அடங்க மறுத்த காளைகளுக்கும் உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன. தங்ககாசு, வெள்ளி அரைஞாண் கொடி, குத்துவிளக்கு, மின்விசிறி, கியாஸ் அடுப்பு, சில்வர் மற்றும் பித்தளை அண்டா, செல்போன், சைக்கிள், ரொக்கப்பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஏத்தாப்பூர், புத்திரகவுண்டன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து ரசித்து பார்த்தனர்.

30 பேர் காயம்

இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி தள்ளியதில், ஆத்தூர் அருகே கூடமலையை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் ரகுநந்தன் (வயது21), நாயக்கன்பட்டியை சேர்ந்த மகேந்திரன் (23), தம்மம்பட்டி ராமராஜ் (27), தமிழரசன் (19), விஜயராஜ் (25), அயோத்தியாபட்டணத்தை சேர்ந்த அண்ணாமலை (19), செந்தாரப்பட்டியை சேர்ந்த தினேஷ் உள்பட 30 பேர் காயம் அடைந்தனர்.

பின்னர், லேசான காயம் அடைந்தவர்களுக்கு அங்கேயே தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் படுகாயம் அடைந்த வீரர்களை மேல் சிகிச்சைக்காக பெத்தநாயக்கன்பாளையம் மற்றும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் பாதுகாப்பு

காலை 8.45 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு விழா மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதில் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை. போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story