சேலத்தில் 3 கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


சேலத்தில் 3 கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 15 March 2020 5:00 AM IST (Updated: 15 March 2020 3:10 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்,

சேலம் மணியனூரில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் 2 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்தநிலையில் நேற்று காலை கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உண்டியல்களை உடைத்து திருட்டு

கோவிலுக்குள் சென்று அவர்கள் பார்த்த போது மர்ம நபர்கள் உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அன்னதானப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதேபோல் அன்னதானப்பட்டி காந்திநகர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலிலும், சண்முகா நகரில் உள்ள ராஜகாளியம்மன் கோவிலிலும் உண்டியல்கள் உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். கோவில்களில் நடந்த இந்த திருட்டு குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்காணிப்பு கேமரா

மேலும் கோவில்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடிச்சென்ற சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story