கோவையில் தொடரும் வன்முறை சம்பவங்கள்: இரவு 10 மணிக்கு கடைகள் மூடப்பட்டன போலீசார் நடவடிக்கை


கோவையில் தொடரும் வன்முறை சம்பவங்கள்: இரவு 10 மணிக்கு கடைகள் மூடப்பட்டன போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 15 March 2020 12:00 AM GMT (Updated: 14 March 2020 9:47 PM GMT)

கோவையில் தொடரும் வன்முறை சம்பவங்களை அடுத்து இரவு 10 மணிக்கு அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

கோவை,

கோவையில் கடந்த 4-ந் தேதி முதல் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன. சட்டம்-ஒழுங்கை மிகவும் பாதிக்கும் வகையில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு காரணமானவர்களை போலீசார் படிப்படியாக கைது செய்து வருகிறார்கள். இதைத் தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி கோவை வந்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வாய்ப்புகளை தடுப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.

அதில் கோவையில் இரவு 10 மணிக்குள் கடைகளை மூட உத்தரவிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவை மாநகரம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளும் இரவு 10 மணிக்குள் மூட உத்தரவிடப்பட்டது. இதை அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கோவையில் ஓட்டல்கள் உள்பட அனைத்து கடைகளும் இரவு 10 மணிக்கு மூடப்பட்டன. அடுத்த கட்டமாக கோவையில் எங்கெங்கு தள்ளுவண்டி டிபன் கடைகள் மற்றும் சாலையோர கடைகளை செயல்படுகின்றன என்பதை கணக்கெடுக்குமாறு மாநகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி அவர்கள் விசாரித்து அது பற்றிய விவரங்களை போலீசாரிடம் அளித்தனர். அதன்பேரில் கோவையின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்த தள்ளுவண்டி கடைகள் மற்றும் சாலையோர கடைகளையும் போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

காரணம் என்ன?

இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

முன்பு இரவில் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்களில் உள்ள ஓட்டல்கள் உள்பட கடைகள் இரவு முழுவதும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது கோவையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையம் முன்பு உள்பட கோவையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளையும் இரவு 10 மணிக்குள் மூடப்பட்டன.

இரவில் ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றால் அதில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது. இதற்கு காரணம் இரவில் செயல்படும் கடைகளால் தான். எனவே தான் அவற்றை 10 மணிக்குள் மூட உத்தரவிட்டுள்ளோம். மேலும் இரவில் திறந்திருக்கும் கடைகளுக்கு வருபவர்கள் தேவையில்லாமல் பேசி பிரச்சினையை உருவாக்குவதாலும் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்னும் சில நாட்களுக்கு தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவையில் நேற்று இரவு போலீசார் மைக் மூலம் கடைகளை அடைக்க சொல்லி அறிவிப்பு செய்ததுடன் நகரம் முழுவதும் விடியவிடிய வாகன சோதனையை தீவிரப்படுத்தினர்.

Next Story