பின்தங்கிய விருதுநகர் மாவட்டத்துக்கு மத்திய அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தல்


பின்தங்கிய விருதுநகர் மாவட்டத்துக்கு மத்திய அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 March 2020 9:54 PM GMT (Updated: 14 March 2020 9:54 PM GMT)

மத்திய அரசால் பின்தங்கிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள விருதுநகர் மாவட்டத்துக்கு வருடத்துக்கு ரூ.100 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.

விருதுநகர்,

விருதுநகர் அருகே வச்சக்காரபட்டியில் நடந்த அரசு விழாவில் கலந்துகொள்ள வந்த மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்லியிலும் நாடாளுமன்றத்திலும் அமித்ஷாவின் ஆட்சி தான் நடைபெறுகிறது. டெல்லியில் நடந்த வன்முறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என 7 நாட்கள் நாடாளுமன்றத்தை நடைபெற விடாமல் போராட்டம் நடத்தினோம். நாங்கள் காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 சஸ்பெண்டு செய்யப்பட்டோம். விவாதம் நடத்தப்படாமல் இருந்தால் சபையில் ஒரு காங்கிரஸ் எம்.பி. இருக்கும்வரை சபையை நடத்தவிட்டு இருக்கமாட்டோம். சபாநாயகர் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்து உள்ளார். டெல்லி வன்முறைக்கு அமித்ஷாதான் காரணம். அவர் ராஜினாமா செய்யவேண்டும். டெல்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது பிரதமர் வராதது வேதனை அளிக்கிறது.

மத்திய அரசு நிதிஉதவியுடன் தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகம் மருத்துவத்துறையில் என்றுமே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாட்டு மக்கள் சிகிச்சைக்காக சென்னை வருகின்றனர். இங்கு திறமை மிக்க மருத்துவர்கள் உள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது சுகாதாரத்துறை மந்திரியாக இருந்த குலாம் நபி ஆசாத், இந்திய மருத்துவ குழுவின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்தார். அதன்படி மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளை தரம் உயர்த்தி இணைப்பு ஆஸ்பத்திரிகளாக கொண்டு மருத்துவ கல்லூரிகள் தொடங்கலாம் என்பது தான். இதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு 11 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி தொடங்க அனுமதி அளித்து உள்ளது. இந்த மருத்துவ கல்லூரிகளில் 85 சதவீத தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்து உள்ளது ஏற்புடையது அல்ல.

நீட்தேர்வு அடிப்படையில்தான் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். தமிழக அரசுக்கு நீட் தேர்வை ரத்து செய்வதற்கான போராட்டங்களை நடத்த முதுகெலும்பு இல்லை. முதல்-அமைச்சர் இந்த பிரச்சினையில் நாடகமாடுகிறார். கல்வி, சுகாதாரம், மத்திய- மாநில அரசுகளின் பொதுபட்டியலில் இல்லாமல் மாநில அரசின் பட்டியலுக்கு கொண்டுவரவேண்டும் என ராகுல்காந்தி கூறியதை நிறைவேற்றினால் தான் நீட் தேர்வு பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும். ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்ட பின்புதான் தமிழகத்தில் நீட்தேர்வை ரத்து செய்ய வாய்ப்பு ஏற்படும்.

மத்திய அரசு நாடுமுழுவதும் 155 மாவட்டங்களை பின் தங்கிய மாவட்டங்களாக அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்ற விருதுநகர் மாவட்டத்தை 3 ஆண்டுகளில் முன்னோடி மாவட்டமாக உருவாக்குவோம் என்றும் உறுதி அளித்துள்ளது. ஆனால் சிறப்பு நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை. நாடாளுமன்றத்தில் இந்த மாவட்டம் தொடர்பாக எந்த கேள்வியை கேட்டாலும் பின்தங்கிய மாவட்டமான விருதுநகருக்கு சிறப்பு திட்டங்களை கொண்டுவந்துள்ளோம் என்று தெரிவிக்கிறார்களே தவிர நிதி ஒதுக்கீடுபற்றி எதுவும் பேசுவது இல்லை.

நாடாளுமன்றத்திலேயே பின்தங்கிய விருதுநகர் மாவட்டத்துக்கு மத்திய அரசு விதித்துள்ள காலக்கெடுவான 3 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என வலியுறுத்தி பேசினேன். மத்திய அரசு நடப்பு நிதி ஆண்டிலாவது இதற்கான சிறப்பு நிதி ஒதுக்கீட்டை செய்யவேண்டும். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ் போன்ற மேலை நாடுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பால் 2 பேர் உயிர் இழந்துள்ள நிலையில் 81 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். பிரதமர் நரேந்திரமோடி இதனால் தனது குஜராத் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். மத்திய மந்திரிகளும் பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யக்கூடாது என அறிவுறுத்தி உள்ளார். ஆனால் தமிழகத்தில் முதல்-அமைச்சரை மகிழ்விப்பதற்காக அமைச்சர்களும், கட்சி பிரமுகர்களும் பெரும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்கின்றனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் மக்கள் நலனில் அக்கறை கொண்டு இந்தமாதிரியான நிகழ்ச்சி ஏற்பாடுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆடம்பர விழாக்களுக்கு அவசியம் இல்லை.

கட்சி தலைமை, ஆட்சி தலைமை வெவ்வேறாக இருக்க வேண்டும் என ரஜினிகாந்த் கூறி உள்ளது வரவேற்கத்தக்கது. 10 ஆண்டுகாலம் சோனியாகாந்தி கட்சித் தலைவராக இருந்தபோது தலைசிறந்த பொருளாதார நிபுணர் மன்மோகன்சிங் பிரதமராக பணியாற்றினார். கட்சித்தலைவர் அதிகாரத்தில் தலையிட்டது இல்லை. அதிகாரத்துக்கு ஆசை பட்டதும் இல்லை. ரஜினிகாந்த் கூறிய சில கருத்துகள் காலத்தோடு ஒத்துப்போகாத கருத்துகளாக உள்ளன. அ.தி.மு.க., தி.மு.க. தலைமையிலான ஆட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும் என கூறி உள்ளார்.

அ.தி.மு.க. ஆட்சி தான் மாற்றப்படவேண்டிய ஆட்சி. தமிழகத்தில் தற்போது மாற்றம் வரவில்லை என்றால் எப்போதும் மாற்றம் வராது என ரஜினிகாந்த் கூறிஉள்ளது அவரது நிலைப்பாடு. அவரது ரசிகர்கள் தான் அதனை முடிவு செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக வச்சக்காரப்பட்டி கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடந்த ஊட்டச்சத்து விழாவை எம்.பி. தொடங்கி வைத்தார். திட்ட அதிகாரி ராஜம் வரவேற்று பேசினார். வச்சக்காரபட்டி பஞ்சாயத்து தலைவர் ஜெயபாண்டி அம்மாள் போட்டிகளில் வெற்றிபெற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார். குழந்தைகள் நல அதிகாரி ஹேமலதா நன்றி கூறினார்.

Next Story