கரூர் ஒன்றியத்தில் ரூ.8 கோடியே 91 லட்சத்தில் புதிய கூட்டுக்குடிநீர் திட்ட பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்


கரூர் ஒன்றியத்தில் ரூ.8 கோடியே 91 லட்சத்தில் புதிய கூட்டுக்குடிநீர் திட்ட பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 March 2020 11:30 PM GMT (Updated: 15 March 2020 7:47 PM GMT)

கரூர் ஒன்றியத்தில் ரூ.8 கோடியே 91 லட்சத்தில் புதிய கூட்டுக்குடிநீர் திட்ட பணியினை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

கரூர்,

கரூர் ஊராட்சி ஒன்றியம் மேட்டுப்பாளையம் காவிரிக்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆத்தூர், மண்மங்கலம் மற்றும் கடம்பங்குறிச்சி ஊராட்சிகளுக்கான புதிய காவிரி கூட்டுக் குடிநீர்திட்ட பணியினை ரூ.8 கோடியே 91 லட்சம் மதிப்பில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பூமிபூஜை போட்டு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் பேசியபோது கூறியதாவது:-

கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் ஆத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு நிரந்தரமாக குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும். கரூர் மாவட்டம் முழுவதும் 40 அலுவலர்கள் 4 நாட்களாக ஆய்வுசெய்து அதன் அடிப்படையில் திட்டமிடப்பட்டு தாந்தோணி பகுதிக்கு ரூ.81 கோடியே 40 லட்சம் மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. மிகவும் வறண்ட பகுதியான க.பரமத்தி மற்றும் அரவக்குறிச்சி பகுதிகளுக்கு குடிநீர்திட்ட பணிகளுக்காக முதலில் ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பின்பு மறுமதிப்பீடு செய்யப்பட்டு ரூ.310 கோடியில் பணிகள் நடைபெற உள்ளது. காதப்பறை ஊராட்சிக்காக ரூ.3 கோடியே 10 லட்சம் மதிப்பில் 11 கிலோ மீட்டர் நீளத்திற்கு பைப்லைன் அமைத்து தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. அதே போல் பஞ்சமாதேவியில் ரூ.1 கோடி மதிப்பில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் சேமிப்பு தொட்டி அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் பல்வேறு குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அவை அனைத்தும் முடிக்கப்பட்டு விரைவில் கரூர் மாவட்டம் குடிநீர் தன்னிரைவு பெற்ற மாவட்டமாக உருவாகும்.

நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை

புகளர் காவிரி பகுதியில் ரூ.500 கோடியில் கதவணை அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. கரூர் மாவட்டம் நெரூர், நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூர் இடையேயும், குளித்தலை மற்றும் முசிறி இடையேயும் கதவணை அமைக்க நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கரூர் ரெயில்நிலையம் முதல் சேலம் புறவழிச்சாலை வரை ரூ.22 கோடியில் அம்மா சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 57 நில உரிமையாளர்களிடம் குழு அமைத்து பேச்சு வார்த்தை நடத்தி அனுமதி பெற்று உள்ளோம். முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தில் கிராமம், கிராமமாக சென்று பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு பள்ளியில் சமையல்கூடம்

அதனை தொடர்ந்து ஆத்தூர் ஊராட்சி தன்னாசிகவுண்டனூரில் ரூ.7 லட்சம் மதிப்பில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கும், புஞ்சை கடம்பங்குறிச்சி ஊராட்சி சின்னப்வரப்பாளையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் அமைக்கும் பணிக்கும், வங்கால் ஊராட்சி குப்புச்சிபாளையம் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் சமையல் கூடம் அமைக்கும் பணி என்பன உள்ளிட்ட பல்வேறு பணிகளை பூமி பூஜையிட்டு அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதில், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை கூடுதல் இயக்குனர் கவிதா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பிரபுராம், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தானேஷ் என்கிற முத்துக்குமார், கரூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் பாலமுருகன், கூட்டுறவு சங்க பிரதிநிதி கமலக்கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story