கொரோனா வைரஸ், பறவை காய்ச்சல் பீதி: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 2 நாட்களில் 58 காசுகள் சரிவு


கொரோனா வைரஸ், பறவை காய்ச்சல் பீதி: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 2 நாட்களில் 58 காசுகள் சரிவு
x
தினத்தந்தி 16 March 2020 5:00 AM IST (Updated: 16 March 2020 1:52 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தொடர்பான வதந்தி மற்றும் பறவை காய்ச்சல் பீதி காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 2 நாட்களில் 58 காசுகள் சரிவடைந்து 265 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 323 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 33 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 290 காசுகளாக சரிவடைந்தது.

இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மேலும் 25 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 265 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டு சரிவடைந்து உள்ளது.

பண்ணையாளர்கள் கவலை

கொரோனா வைரஸ் தொடர்பான வதந்தி மற்றும் பறவை காய்ச்சல் பீதி காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விற்பனை கடும் சரிவை சந்தித்து உள்ளது. இதனால் கோடிக்கணக்கான முட்டைகள் தேக்கம் அடைந்து உள்ளன. எனவே முட்டை நுகர்வை அதிகரிக்க செய்வதற்காக அதன் விலை குறைக்கப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் முட்டை கொள்முதல் விலை 58 காசுகள் சரிவடைந்து உள்ளது. சுமார் 10 ஆண்டுகள் இல்லாத வகையில் முட்டை கொள்முதல் விலை சரிவடைந்து இருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.


Next Story