தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டி 19 பேர் காயம்


தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டி 19 பேர் காயம்
x
தினத்தந்தி 16 March 2020 5:30 AM IST (Updated: 16 March 2020 3:00 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 19 பேர் காயம் அடைந்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் திருக்கானூர்பட்டி, மாதாக்கோட்டை, நாஞ்சிக்கோட்டை, மானோஜிப்பட்டி ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சையை அடுத்த ரெட்டிப்பாளையம் பூக்கொல்லையில் சாத்தையா கோவில் மைதானத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் அதிகாலை முதலே சரக்கு வேன் மூலம் அழைத்து வரப்பட்டன. மாடுபிடி வீரர்களும் அதிகாலை முதலே வரத்தொடங்கினர். காளைகளை அடக்க வந்திருந்த மாடுபிடி வீரர்களை மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர். பரிசோதிக்கப்பட்ட பின்னர் சுழற்சி முறையில் வீரர்கள் களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

பரிசுகள்

அதன்பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளின் திமிலைபிடிக்க வீரர்கள் துணிச்சலாக சென்றனர். ஒன்றுக்கு மேற்பட்ட வீரர்கள் காளையை பிடித்தபோது காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஒரு காளையை ஒரு வீரர் பிடித்தால் மட்டுமே மாடு பிடிபட்டதாக அறிவிக்கப்பட்டு பரிசு பொருட்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டது. பிடிபடாத காளைகளுக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்களை அதன் உரிமையாளர்கள் பெற்று கொண்டனர்.

காளையர்களின் பிடியில் சிக்காத காளைகளுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் சைக்கிள், கட்டில்கள், எவர்சில்வர் பாத்திரங்கள், மின்விசிறி, குக்கர், குத்து விளக்கு, வெள்ளிக்காசு, ரொக்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு காலை 8 மணிக்கு தொடங்கியது. கலெக்டர் கோவிந்தராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக வீரர்கள், ஜல்லிக்கட்டு உறுதிமொழியை எடுத்து கொண்டனர். ஜல்லிக்கட்டு மாலை 4.30 மணிக்கு முடிவடைந்தது.

19 பேர் காயம்

ஜல்லிக்கட்டிற்கு வந்திருந்த 775 காளைகளும் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. 389 வீரர்கள் களத்தில் இறங்கினர். காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் 5 பேர், காளையின் உரிமையாளர்கள் 5 பேர், வீரர்கள் 9 பேர் என மொத்தம் 19 பேர் காயம் அடைந்தனர். இவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. இவர்களில் பலத்த காயம் அடைந்த ஒரு வீரர் மட்டும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். கொரோனோ வைரஸ் தாக்குதல் எதிரொலியாக மருத்துவ பணியாளர்கள் அனைவரும் முககவசம் அணிந்து இருந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பல போலீசார் முககவசம் அணிந்திருந்தனர்.

Next Story