கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வருகை குறைந்தது
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக பழனி முருகன் கோவிலில் நேற்று பக்தர்கள் வருகை குறைவாக காணப்பட்டது.
பழனி,
முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினந்தோறும் பக்தர்கள் வருவார்கள். குறிப்பாக திருவிழா, வார விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள்.
இந்தநிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கூடும் இடங்களான வணிக வளாகம், பஸ் நிலையங்கள், விமான நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
கொரோனா வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்க மக்கள் அனைவரும் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளதுடன் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் பீதியால் பெரும்பாலான வழிபாட்டு தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
அந்தவகையில் பழனி முருகன் கோவிலில் நேற்று பக்தர்கள் வருகை குறைவாக காணப்பட்டது. வழக்கமாக வாரவிடுமுறை நாட்களில் பக்தர்கள் வருகை மற்ற நாட்களை காட்டிலும் இருமடங்கு காணப்படும். ஆனால் நேற்று மலைக்கோவில் வெளிப்பிரகாரம், உட்பிரகாரம் ஆகியவை பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல் திருஆவினன்குடி, பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் இன்றி வெறிச்சோடி இருந்தது.
Related Tags :
Next Story