பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் பெண்களுக்கு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்


பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் பெண்களுக்கு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 March 2020 3:30 AM IST (Updated: 16 March 2020 7:06 PM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகம் முன்பு பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் பெண்களுக்கு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலம் முன்பு தலித் மண்ணுரிமை கூட்டமைப்பு, டாக்டர் அம்பேத்கர் பேரவை, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. டாக்டர் அம்பேத்கர் பேரவையின் மாநில இணை பொதுச் செயலாளர் சி.ஏழுமலை, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் எம்.ரவி ஆகியோர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் லட்சுமி, ஆர்த்தி உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

தலித் மண்ணுரிமை கூட்டமைப்பு, டாக்டர் அம்பேத்கர் பேரவை கூட்டமைப்பின் மாநில தலைவர் சி.நிக்கோலஸ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் டி.செல்லக்கண்ணு ஆகியோர் கோரிக்கைள் குறித்து விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், செங்கம் தாலுகா புளியம்பட்டி கிராமத்தில் பஞ்சமி நிலம் கேட்டு மனு கொடுத்த 186 பெண்களுக்கும் உடனடியாக பட்டா வழங்க வேண்டும். கலசபாக்கம் தாலுகா வீரளூர் கிராமத்தில் 32 ஏக்கர் பஞ்சமி நிலங்களின் பட்டாவை ரத்து செய்து மனு கொடுத்த வீரளூர் தலித் பெண்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை தனித்தனியாக மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் வழங்கினர்.

ஆர்ப்பாட்டத்தையொட்டி திருவண்ணாமலை கிழக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story