இந்து முன்னணி பிரமுகரை தாக்கியவரின் வீட்டில் போலீஸ் சோதனை - செல்போன்களை கைப்பற்றி விசாரணை
இந்து முன்னணி பிரமுகரை தாக்கி கைதான ஆட்டோ டிரைவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில் பதிவான தகவல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை,
கோவையில் கடந்த 4-ந் தேதி இரவு இந்து முன்னணி பிரமுகர் ஆனந்த் (வயது 33) என்பவர் தாக்கப்பட்டார்.
இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்தியதாக கரும்புக்கடை சாரமேடு காந்தி நகரை சேர்ந்த நூர் முகமது (30). ஆட்டோ டிரைவர். மதுக்கரையை சேர்ந்த அசாருதீன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை கோவை மாநகர போலீஸ் தெற்கு உதவி கமிஷனர் செட்ரிக் இம்மானுவேல், போத்தனூர் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமையிலான போலீசார் சாரமேடு காந்திநகரில் உள்ள நூர் முகமது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதனையொட்டி வீட்டின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த சோதனை காலை 7 மணி முதல் 8.30 மணி வரை நடந்தது.
சோதனையில் போலீசார் நூர் முகமது வீட்டில் இருந்து சிம்கார்டு இல்லாத 3 செல்போன்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இந்துமுன்னணி பிரமுகரை தாக்கியது ஏன்? இதற்கான பின்னணி என்ன? என்பது குறித்து அறிவதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story