கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து ‘டாஸ்மாக்’ கடைகளையும் மூடக்கோரி கலெக்டரிடம் புகார் மனு


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து ‘டாஸ்மாக்’ கடைகளையும் மூடக்கோரி கலெக்டரிடம் புகார் மனு
x
தினத்தந்தி 17 March 2020 5:00 AM IST (Updated: 17 March 2020 1:41 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து ‘டாஸ்மாக்’ கடைகளையும் மூடக்கோரி கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.

திருச்சி,

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் நிர்வாகிகள் முககவசம் அணிந்தபடி கொடுத்த மனுவில், கொரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்பாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. அங்குதான், குடிமகன்கள் கண்ட கண்ட இடங்களில் இறைச்சியை உண்டு ரோட்டில் வீசி செல்லும் நிலை உள்ளது. எனவே, உடனடியாக திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடை களையும் 3 மாதங்களுக்கு மூடி வைப்பதுடன் நோய் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

மாற்றுத்திறனாளிகள் மனு

தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில், ‘தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தொலைவிற்குள் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதை மீறும் வகையில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வாழவந்தான்கோட்டை சுங்கச்சாவடி அருகில் 50 மீட்டர் தொலைவில் புதிதாக மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த கடையை அப்புறப் படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தேசிய கூட்டமைப்பு சார்பில் கலியமூர்த்தி தலைமையில் குறைதீர்க்கும் கூட்டத்தில் கொடுத்துள்ள மனுவில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 என்பதை உயர்த்தி ரூ.3 ஆயிரமாக வழங்கிட வேண்டும், சுயவேலைவாய்ப்புக்கு ஏதுவாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்பு கடைகளை 2 சதவீதம் ஒதுக்கீடு செய்து மானியத்துடன் கூடிய வட்டியில்லா கடன்களையும் வழங்க வேண்டும். இலவச வீடுகள் ஒதுக்கித்தர வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

விவசாய சங்கம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட செயலாளர் சிவ.சூரியன் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், ‘மேட்டூர் உபரிநீரை சேலம் சரபங்கா வடிநிலங்களுக்கு கொண்டு செல்லும் திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி காலங்களில் திட்டமிட்டப்படி, சேலம், நாமக்கல், திருச்சி மாவட்ட வறட்சி பகுதிகள் பயன்பெறும் வகையில் மேட்டூர்-சரபங்கா-திருமணிமுத்தாறு-கரைப்பட்டானாறு-அய்யாறு-கீரம்பூர் ஏரி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மாநகர வளர்ச்சி ஆர்வலர்கள் தரப்பில் கொடுத்துள்ள மனுவில், கொரோனா வைரஸ் தொற்று குறித்து வெற்று கோஷம் போடாமல் மருத்துவ முறைகளை உருப்படியாக, உண்மையாக மேற்கொள்ள வேண்டும். மேலும் திருச்சி மாவட்டத்தில் பொது இடங்களில், சாலையோரம், ஆற்றங்கரைகள், குளக்கரைகள் உள்ளிட்ட இடங்களில் கழிவுகள் கொட்டுவதை தடை செய்திட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Next Story