குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வங்கியில் பணம் எடுக்கும் போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வங்கியில் பணம் எடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 16 March 2020 10:15 PM GMT (Updated: 16 March 2020 8:25 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வங்கியில் பணம் எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

கீழக்கரை,

கீழக்கரை அருகே உள்ள பெரியபட்டணத்தில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும், தமிழக அரசு சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கியில் பணம் எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து கீழக்கரை, பெரியபட்டணம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் வங்கி வாசலில் குவிந்த னர். அவர்கள் தங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஒரே நேரத்தில் ஏராளமானோர் வங்கி வாசலில் கூடியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்.எஸ்.மங்கலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி த.மு.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆர்.எஸ்.மங்கலம் முஸ்லிம் ஜமாத் தலைவர் அன்வர்தீன் தலைமை தாங்கினார். த.மு.மு.க. மாவட்ட தலைவர் பட்டாணி மீரா முன்னிலை வகித்தார். அனைவரையும் ஒன்றிய தலைவர் சாகுல்ஹமீது வரவேற்று பேசினார். இதில் த.மு.மு.க. மாநில நிர்வாகி ஹனிபா, ரைஸ் இப்ராகிம் செரீப், காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த், ஆர்.எஸ்.மங்கலம் வட்டார பங்குத்தந்தை கிளமெண்ட்ராஜா, மாவட்ட உலமாக்கள் சபை தலைவர் அகமது இப்ராகிம், ஆர்.எஸ்.மங்கலம் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் தனமதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம் கிளை த.மு.மு.க. தலைவர் அப்துல் ரகுமான், செயலாளர் முபாரக், பொருளாளர் கலீல் ரகுமான், ஆர்.எஸ்.மங்கலம் முன்னாள் பேரூராட்சி தலைவர் சாகுல் ஹமீது, முன்னாள் ஜமாத் செயலாளர் சீனி முகமது, தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகிகள், பழனிபாவா இளைஞர் பேரவை நிர்வாகிகள், அனைத்து சமுதாய மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் ஒன்றிய தலைவர் உபையதுல்லா நன்றி கூறினார்.

Next Story