கொரோனா வைரஸ் எதிரொலி: சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் தஞ்சை பெரியகோவில் வெறிச்சோடியது


கொரோனா வைரஸ் எதிரொலி: சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் தஞ்சை பெரியகோவில் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 16 March 2020 11:30 PM GMT (Updated: 16 March 2020 8:35 PM GMT)

கொரோனா வைரஸ் பரவுவதையடுத்து சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் தஞ்சை பெரியகோவில் வெறிச்சோடி காணப்பட்டது. கோவில் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இக்கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு 1010 ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த கோவிலில் 23 ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த மாதம் குடமுழுக்கு நடைபெற்றது.

இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். குடமுழுக்கு நடைபெற்ற பின்னர் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியதால் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

வெறிச்சோடியது

நேற்று முன்தினம் விடுமுறை நாட்கள் என்பதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் நேற்று பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. காலையில் இருந்தே சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.

மாலையில் பெரியகோவில் வெறிச்சோடி காணப்பட்டது. இதே போல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்து காணப்பட்டது.

கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில், தஞ்சை பெரியகோவில் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பக்தர்கள் வந்து செல்லும் பாதை, அமரும் இடங்கள் உள்பட கோவில் வளாகம் முழுவதும் இந்த மருந்து தெளிக்கப்பட்டது.

மேலும் கோவிலின் முகப்பு பகுதியில் டாக்டர்கள் குழுவினர் ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக்கொண்டு கைகளை எவ்வாறு சோப்பு போட்டு கழுவ வேண்டும் என பெரியகோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு செயல்முறை விளக்கமும் செய்து காண்பித்தனர்.

இதே போல் தஞ்சை பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையத்திலும் அனைத்து பஸ்களிலும் மாநகராட்சி பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.

Next Story