கொரோனா வைரஸ் எதிரொலி: கலெக்டர் அலுவலகத்தில் தண்ணீர் பாட்டிலுக்கு தடை


கொரோனா வைரஸ் எதிரொலி: கலெக்டர் அலுவலகத்தில் தண்ணீர் பாட்டிலுக்கு தடை
x
தினத்தந்தி 17 March 2020 3:45 AM IST (Updated: 17 March 2020 2:17 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தண்ணீர் பாட்டிலுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க, ஏராளமான மக்கள் வருகின்றனர். அதில் ஒருசிலர் விரக்தி அடைந்து தீக்குளிக்க முயற்சி செய்கின்றனர். இதை தடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் அனைவரையும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது தண்ணீர் பாட்டிலையும் திறந்து சோதனை செய்வார்கள்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வழக்கம் போல் ஏராளமானோர் வந்தனர். அதில் பலர் பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்தனர். ஆனால், தண்ணீர் பாட்டிலை கலெக்டர் அலுவலகத்துக்குள் கொண்டு செல்ல போலீசார் தடை விதித்தனர். மேலும் தண்ணீர் பாட்டிலை பறிமுதல் செய்து, வளாகத்தில் வைத்தனர். இதனால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மனு கொடுத்துவிட்டு தாகத்துடன் வெளியே வந்து தண்ணீர் குடித்தனர்.

அதேபோல் தீப்பெட்டி, சிகரெட், பீடி ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு கருதி போலீசார் மேற்கொள்ளும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அதேநேரம் கோடைகாலம் என்பதால் தண்ணீர் முக்கிய தேவையாக உள்ளது. எனவே, மனு கொடுக்க வருவோரின் சிரமத்தை தவிர்க்க, கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடிநீர் தொட்டி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அதேபோல் நேற்று மனு கொடுக்க வந்த அனைவருக்கும் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவுவாயிலில் கிருமிநாசினி வழங்கப்பட்டது. அதை கொண்டு கையை சுத்தம் செய்தபின்னரே மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு துண்டுபிரசுரமும் வழங்கப்பட்டது. 

Next Story