காலமுறை ஊதியம் வழங்கக்கோரி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடந்தது


காலமுறை ஊதியம் வழங்கக்கோரி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடந்தது
x
தினத்தந்தி 17 March 2020 4:30 AM IST (Updated: 17 March 2020 2:39 AM IST)
t-max-icont-min-icon

காலமுறை ஊதியம் வழங்கக்கோரி திருவாரூரில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

மேல்நிலை தொட்டி இயக்குனர், துப்புரவு தொழிலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். 7-வது ஊதியக்குழு உத்தரவினை நடைமுறைப்படுத்தி உயர்த்தப்பட்ட ஊதியம் மற்றும் ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் மற்றும் என்.எம்.ஆர். ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முனியாண்டி முன்னிலை வகித்தார். மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அடையாள அட்டை

பணியில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்க வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும். தூய்மை காவலருக்கு மாத ஊதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் நிர்வாகிகள் தமிழ்செல்வன், காமராஜ், கலியமூர்த்தி, லோகநாயகி, ஞானசேகரன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

Next Story