கோழிகளின் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பண்ணை உரிமையாளர்கள், கலெக்டரிடம் மனு


கோழிகளின் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பண்ணை உரிமையாளர்கள், கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 17 March 2020 3:47 AM IST (Updated: 17 March 2020 3:47 AM IST)
t-max-icont-min-icon

கோழிகளின் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக சமூக வலைதளங்களின் வதந்தி பரப்புவோர்கள் மீது நடவகைக்கை எடுக்க வேண்டும் என கோழிப்பண்ணை உரிமையாளர்கள், கலெக்டர் ‌ஷில்பாவிடம் மனு கொடுத்தனர்.

நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ‌ஷில்பா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனு வாங்கினார்.

வழக்கமாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கோரிக்கை மனுக்களை முத்திரையிட்டு கம்ப்யூட்டரில் பதிவு செய்வார்கள். கொரோனா வைரஸ் பீதி காரணமாக நேற்று பொதுமக்கள் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் மனுக்கள் முத்திரையிட்டவுடன், அந்தந்த துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் கலெக்டர் ‌ஷில்பா பொதுமக்கள் சிலரிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

தமிழ்நாடு கோழிப்பண்ணை உரிமையாளர் சங்கத்தினர் திரளாக கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள், கலெக்டரிடம் மனு கொடுத்த மனுவில், “கெரோனா வைரஸ் பிராய்லர் கோழிகள் மூலம் பரவுவதாக சிலர் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பதிவிட்டுள்ளனர். இதனால் எங்கள் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. கோழிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

தமிழர் விடுதலைக்களத்தின் நெல்லை மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமையில் ஏராளமானவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள், கலெக்டரை சந்தித்து கொடுத்த மனுவில், “பாளையங்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட குன்னத்தூர் காளியம்மன் கோவில் தெருவில் பட்டியல் வகுப்பை சேர்ந்த மக்கள் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள ஸ்ரீதேவி காளியம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலம் குன்னத்தூரில் உள்ளது. இந்த நிலத்தை குன்னத்தூரில் செயல்படும் குறுக்குத்துறை வேளாண் கடன் சங்கத்தினர் மோசடியாக போலி ஆவணங்கள் தயார் செய்து, அபகரிக்க முயற்சி செய்கிறார்கள். இதை தாங்கள் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், “மானூர் தாலுகாவுக்கு உட்பட்ட மதவக்குறிச்சி, ரஸ்தா, நரியூத்து, வெங்கப்பொட்டல், பட்டவர்த்தி, துலுக்கர்குளங்களை சேர்ந்த பொதுமக்கள் புறம்போக்கு நிலத்தில் ஆடு, மாடு மேய்த்து வருகிறார்கள். அந்த பகுதியில் ஒரு தனியார் சோலார் நிறுவனம் சட்டவிரோதமாக நிலத்தை கையகப்படுத்தி உள்ளது. இதனால் அந்த பகுதியில் ஆடு, மாடு மேய்ச்சல் செய்ய முடியவில்லை. தாங்கள் நேரிடையான ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை மீட்டு தர வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

அம்பை அருகே உள்ள வைராவிகுளத்தை சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “எங்கள் பகுதியில் வேலை செய்யும் ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்களுக்கு 6 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. இது போல் பல பகுதியில் வேலை செய்பவர்களுக்கும் சம்பளம் கிடைக்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை என்று கூறுகிறார்கள். எங்களுக்கு உடனடியாக சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

ராதாபுரம் தாலுகாவை சேர்ந்த சிதம்பரபுரம்- யாக்கோபுரம் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்களும், பாரதீய ஜனதா, இந்து முன்னணி, வி‌‌ஷ்வ இந்த பரி‌‌ஷத் அமைப்பைச்சேர்ந்த நிர்வாகிகளும் வந்தனர்.

அவர்கள் அங்கு முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர் ஊர் பொது மக்கள் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், எங்கள் ஊரின் ஒரு பகுதியை ஆவரைகுளம் ஊராட்சியிலும், மற்றொரு பகுதி பழவூர் ஊராட்சியிலும் சேர்க்க வேண்டும். இது தொடர்பான மதுரை ஐகோர்ட்டு கிளையிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக மறுவறை செய்ய முயற்சி நடக்கிறது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே கோர்ட்டு உத்தரவு வரும் வரை எல்லை மறுவரை செய்ய கூடாது“ என்று கூறப்பட்டு இருந்தது.

பணகுடி பரிவிரிசூரியன் கிராமத்தை சேர்ந்த மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், “பணகுடி வீரபாண்டியன் கீழுர் கிராமத்தில் நாங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு இலவச மனை வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.

Next Story