தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 March 2020 12:00 AM GMT (Updated: 16 March 2020 10:30 PM GMT)

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரகவளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யூ.) சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜேசுதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் இம்மானுவேல் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் ஜீவபாரதி தொடங்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர் களுக்கு 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதிக்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு அரசாணைப்படி ரூ.6,860 மாத ஊதியமாக வழங்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆப்பரேட்டர்களுக்கு ரூ.4,960 ஊதியம் வழங்க வேண்டும்.

பணிக்கொடை

ஓய்வு பெற்ற துப்புரவு தொழிலாளர்களுக்கு பணிக்கொடை தொகை ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆப்பரேட்டர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதிய நிலுவைத்தொகைகளை வழங்க வேண்டும். தஞ்சை மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி அனைத்து பேரூராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணி காவலர்களுக்கு தினக்கூலியாக குறைந்தபட்சம் ரூ.385 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் அன்பு, மாநிலக்குழு உறுப்பினர் பேர்நீதி ஆழ்வார், நிர்வாகிகள் மணிவேல், ராஜூ, கலியமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தை சி.ஐ.டி.யூ. மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயபால் முடித்து வைத்தார்.

Next Story