கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: திருப்பூர் மாவட்டத்தில் 1,630 பள்ளிகளுக்கு விடுமுறை


கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: திருப்பூர் மாவட்டத்தில் 1,630 பள்ளிகளுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 17 March 2020 3:30 AM IST (Updated: 17 March 2020 4:06 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1,630 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருப்பூர்,

கொரோனா வைரஸ் தாக்குதல் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதையொட்டி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மற்றும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நேற்று முதல் வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அளிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமே‌‌ஷ் உத்தரவிட்டு உள்ளார்.

இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மழலையர் தொடக்கப்பள்ளி, மெட்ரிக் பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளி, தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை என்று மொத்தம் 1,630 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் தொடக்கப்பள்ளிகளில் வகுப்பறைகள் பூட்டி வைக்கப்பட்டிருந்தன. ஆனால் ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு வந்திருந்த னர். நடுநிலைப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் அனைவரும் நேற்று பள்ளிக்கு வந்திருந்தனர். கொரோனா வைரஸ் எதிரொலியை தொடர்ந்து ஒரு சில பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு முறையாக கை கழுவுதல் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அவர்களுக்கு 3-ம் பருவ தேர்வுக்காக முடிக்க வேண்டிய பாடங்களை ஆசிரியர்கள் நடத்தினர்.

Next Story