காதல் ஜோடியிடம் பணம் பறித்த 2 புதுவை போலீஸ்காரர்கள் பணிநீக்கம்


காதல் ஜோடியிடம் பணம் பறித்த 2 புதுவை போலீஸ்காரர்கள் பணிநீக்கம்
x
தினத்தந்தி 17 March 2020 4:46 AM IST (Updated: 17 March 2020 4:46 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் காதல் ஜோடியிடம் பணம் பறித்த 2 போலீஸ்காரர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

புதுச்சேரி,

புதுவை அம்பலத்தடையார் மடத்து வீதியில் (கொசக்கடை வீதி) உள்ள விடுதி ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் பகுதியை சேர்ந்த 2 காதல் ஜோடிகள் அறை எடுத்து தங்கினர்.

இந்த நிலையில் பெரியகடை போலீஸ்காரர் சதீஷ்குமார், ஐ.ஆர்.பி. போலீஸ்காரர் சுரேஷ் ஆகியோர் அங்கு ரோந்து பணி சென்றுள்ளனர். அவர்கள் காதல் ஜோடி தங்கியிருந்த அறைக்கு சென்று சோதனை என்ற பெயரில் அவர்களிடம் தகாத முறையில் பேசியுள்ளனர்.

மேலும் ஒரு காதல் ஜோடியை மிரட்டி ரூ.15 ஆயிரம் பணம் பறித்ததாக கூறப்படுகிறது. மற்றொரு காதல் ஜோடியிடம் பெரிய அளவில் பணம் இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவர்களிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்ட போலீசார் காதலன் முன்னிலையில் காதலியான இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

பணிநீக்கம்

இதுபற்றிய தகவல் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா உத்தரவின் பேரில் பெரியகடை போலீஸ்காரர் சதீஷ்குமார், ஐ.ஆர்.பி. போலீஸ்காரர் சுரேஷ் ஆகியோர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது கூட்டு சேருதல், மிரட்டி பணம் பறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் பெரியகடை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் அதிரடியாக போலீஸ்காரர் சதீஷ் குமார், ஐ.ஆர்.பி. போலீஸ்காரர் சுரேஷ் ஆகிய 2 பேரையும் பணிநீக்கம் செய்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் நேற்று இரவு உத்தரவிட்டார்.

புதுவைக்கு வந்த காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்ததுடன் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் போலீ்ஸ்காரர், ஐ.ஆர்.பி. போலீஸ்காரர் ஆகிய இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story