காங்கிரஸ் வீழ்ச்சியை நோக்கி செல்கிறது தனவேலு எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு


காங்கிரஸ் வீழ்ச்சியை நோக்கி செல்கிறது தனவேலு எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 March 2020 5:05 AM IST (Updated: 17 March 2020 5:05 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியை நோக்கி செல்கிறது என்று தனவேலு எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி,

புதுவை அமைச்சரவையை விமர்சித்த எம்.எல்.ஏ. தனவேலு காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் கவர்னரை சந்தித்து அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலையும் அளித்தார்.

இதற்கிடையே அவர் மீது தகுதி நீக்க நடவடிக்கை (எம்.எல்.ஏ. பதவி பறிப்பு) எடுக்க அரசு கொறடா அனந்த ராமன் எம்.எல்.ஏ. சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார். இதை எதிர்த்து தனவேலு எம்.எல்.ஏ. ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவினை விசாரித்த ஐகோர்ட்டு, தனவேலு எம்.எல்.ஏ. தனது விளக்கத்தை அளிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

குறுக்கு விசாரணை

இந்தநிலையில் புகார் தொடர்பாக நேரில் ஆஜர் ஆகுமாறு நோட்டீசு அனுப்பியதன்பேரில் தனவேலு எம்.எல்.ஏ. நேற்று சபாநாயகர் சிவக்கொழுந்து முன்பு ஆஜர் ஆனார்.

அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் தனவேலு எம்.எல்.ஏ. கூறியதாவது:-

சபாநாயகர் நான் நேரில் ஆஜர் ஆக நோட்டீசு அனுப்பி இருந்தார். அதன்படி நேரில் ஆஜரானேன். என் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்கும்போது அதற்கான ஆதாரங்கள் குறித்தும் குறுக்கு விசாரணை செய்யவேண்டும்.

வக்கீலுக்கு அனுமதி

இதற்காக என்னை விசாரிக்கும்போது என்னுடன் வக்கீல் இருக்க கேட்டுக்கொண்டேன். அதற்கு சபாநாயகரும் ஒத்துக்கொண்டார். இன்னும் ஓரிரு நாட்களில் அடுத்த விசாரணை குறித்து சபாநாயகர் தெரிவிப்பார்.

புதுவை காங்கிரஸ் கட்சியின் தலைமையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே மாற்றும் நிலை இருந்தது. அப்போது கட்சியின் நிலைமையை கருத்தில்கொண்டு தலைமையை மாற்றக் கூடாது என்று எம்.எல்.ஏ.க் கள் கூறினோம்.

தனிப்பட்ட சக்தியிடம் சிக்கி...

தற்போது கட்சி வீழ்ச்சியை நோக்கி செல்கிறது. பெரும்பான்மை சமூகத்தினை சேர்ந்த தலைமையை மாற்றிவிட்டனர். இந்தநிலையில் கட்சி எந்த நிலையை நோக்கி செல்லும் என்று தெரியவில்லை.

இப்போது கட்சி தனிப்பட்ட சக்தியிடம் சிக்கி உள்ளது. 2021 தேர்தலில் எந்த வகையில் கட்சியின் வெற்றி அமையும் என்று தெரியவில்லை.

கட்சி மாறவில்லை

என் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்க 3 காரணிகளை கொடுத்துள்ளனர். அதாவது பத்திரிக்கைகள், ஆடியோ, கட்சி சார்ந்த நபரின் புகார், அரசு கொறடாவின் புகார் ஆகியவற்றை அளித்துள்ளனர். இதில் எதுவும் தகுதிநீக்க நடவடிக்கையில் இடம்பெறாது.

நான் கட்சி மாறவும் இல்லை. ஆட்சியை மாற்றவும் முயற்சிக்கவில்லை. என்னை விசாரிக்கும்போது என் மீது கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும். சபாநாயகர் அடுத்த விசாரணை தொடர்பாக 2 நாளில் தேதியை தருவதாக கூறியுள்ளார்.

இவ்வாறு தனவேலு எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story