அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை பூட்டி போராட்டம்


அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை பூட்டி போராட்டம்
x
தினத்தந்தி 17 March 2020 5:16 AM IST (Updated: 17 March 2020 5:16 AM IST)
t-max-icont-min-icon

பொதுப்பணித்துறை அலுவலகத்தை பூட்டி அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

புதுவை உப்பளம் தொகுதி வழியாக செல்லும் உப்பனாறு வாய்க்கால் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி அதிக அளவில் கொசு உற்பத்தியாகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கொசுக்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் தண்ணீரும் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தர்ணா போராட்டம்

இந்தநிலையில் உப்பளம் தொகுதியை சேர்ந்த மக்கள் நேற்று தலைமை பொறியாளரை சந்திக்க பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு வந்தனர். ஆனால் தலைமை பொறியாளர் மகாலிங்கம் அலுவலகத்தில் இல்லை.

இதைத்தொடர்ந்து அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் தலைமை பொறியாளர் அங்கு வரவில்லை.

பேச்சுவார்த்தை

இதனால் ஆத்திரமடைந்த அன்பழகன் எம்.எல்.ஏ. அலுவலகத்தைவிட்டு பொதுமக்களுடன் வெளியே வந்தார். அலுவலக பிரதான கதவை இழுத்துபூட்டி வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் தலைமை பொறியாளர் மகாலிங்கம் அங்கு விரைந்து வந்தார். அவர் அன்பழகன் எம்.எல்.ஏ.வுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

ஒருவாரம் அவகாசம்

உப்பனாறு வாய்க்கால் தூர்வாரவும், சுத்தமான குடிநீர் வழங்க ஒரு வார காலம் அவகாசம் வழங்குமாறும், அதற்குள் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

இதைத்தொடர்ந்து அன்பழகன் எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Next Story