கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம் மராட்டியம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை சித்தி விநாயகர் கோவில் மூடப்பட்டது


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்   மராட்டியம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை   சித்தி விநாயகர் கோவில் மூடப்பட்டது
x
தினத்தந்தி 17 March 2020 5:54 AM IST (Updated: 17 March 2020 5:54 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில் மூடப்பட்டு, அஜந்தா, எல்லோரா குகைகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மும்பை, 

உலகம் முழுவதையும் அச்சத்தில் உறைய வைத்துள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இந்திய மாநிலங்களில் மராட்டியத்தில் தான் அதிகம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 39 பேர் இந்த கொடிய நோய் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதையடுத்து மராட்டிய அரசு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

மாநிலத்தில் மாநகராட்சி, நகராட்சி, நகர பஞ்சாயத்து பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 31-ந் தேதி வரை ஏற்கனவே விடுமுறை விடப்பட்டது. இந்தநிலையில் மாநிலம் முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இந்த விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சித்தி விநாயகர் கோவில்

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில முக்கிய மத வழிபாட்டு தலங்கள் மற்றும் சுற்றுலா மையங்களை மூட அரசு உத்தரவிட்டது.

இதன்படி மும்பையில் பிரசித்தி பெற்ற சித்திவிநாயகர் கோவில் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவில் நேற்று மூடப்பட்டது. இதனால் பக்தர்கள் இன்றி கோவில் வெறிச்சோடி காணப்பட்டது. கோவிலில் பாதுகாவலர்கள் முக கவசங்கள் அணிவித்தபடி காவலுக்கு நிறுத்தப்பட்டனர்.

இதேபோல உஸ்மனாபாத் மாவட்டத்தில் உள்ள துல்ஜா பவானி கோவிலும் மூடப்பட்டது.

சுற்றுலா பயணிகளுக்கு தடை

மேலும் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள் மூடப்பட்டன. இங்கு சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மும்பையில் மராட்டிய கவர்னர் மாளிகையை சுற்றிப்பார்க்க தினமும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முன்பதிவு அடிப்படையில் தினமும் 20 பேருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வரும் 31-ந்தேதி வரை கவர்னர் மாளிகை சுற்றுலாவை நிறுத்திவைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஏப்ரல் மாதம் வரை கவர்னர் மாளிகையை சுற்றிப்பார்க்க ஏற்கனவே முன்பதிவாகி விட்டது. முன்பதிவு செய்தவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புலிகள் காப்பகம்

மேலும் மராட்டியத்தில் உள்ள புலி காப்பகங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

நவிமும்பையில் உள்ள கடல் பூங்கா மற்றும் பிளமிங்கோ மையமும் இந்த மாத இறுதி வரை மூடப்படும் என வனத்துறை அதிகாரி நிதின் ககோட்கர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story