கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: 1,863 பள்ளிக்கூடம், 43 கல்லூரிகள் மூடப்பட்டன பூங்கா, வழிபாட்டு தலங்களில் கிருமிநாசினி தெளிப்பு


கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி:  1,863 பள்ளிக்கூடம், 43 கல்லூரிகள் மூடப்பட்டன  பூங்கா, வழிபாட்டு தலங்களில் கிருமிநாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 18 March 2020 4:15 AM IST (Updated: 17 March 2020 6:53 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் 1,863 பள்ளிக்கூடங்கள், 43 கல்லூரிகள் மூடப்பட்டன.

தூத்துக்குடி, 

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் 1,863 பள்ளிக்கூடங்கள், 43 கல்லூரிகள் மூடப்பட்டன. மேலும் பூங்கா, வழிபாட்டு தலங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்து உள்ளது.

இதனால் மாவட்டத்தில் உள்ள 1,863 பள்ளிக்கூடங்களும் முழுமையாக மூடப்பட்டன. அதேபோன்று என்ஜினீயரிங் கல்லூரி, மீன்வளக்கல்லூரி, வேளாண்மை கல்லூரி உள்பட மொத்தம் 43 கல்லூரிகளும், 6 பாலிடெக்னிக் கல்லூரிகள், 14 ஐ.டி.ஐ., 17 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் மூடப்பட்டு இருந்தன. தூத்துக்குடியில் உள்ள பூங்காக்கள், 20 சினிமா தியேட்டர்கள் அடைக்கப்பட்டன. சில வணிக வளாகங்கள் காலையில் திறந்து இருந்தன. மதியத்துக்கு பிறகு மூடப்பட்டன.

கண்காணிப்பு 

தூத்துக்குடி கடற்கரை பகுதியில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் போலீசார் காலை முதல் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

மேலும் பூங்காக்கள், வழிபாட்டு தலங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பல்வேறு சினிமா தியேட்டர்கள், வணிகவளாகங்கள், வங்கிகள், ஏ.டி.எம். மையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Next Story