தேங்கி கிடக்கும் நெல்மூட்டைகள்; நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
திருமானூர் ஒன்றியத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய ஏற்பாடுகள் இல்லாததால் நிரம்பி வழிகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தில் அதிகபடியான விவசாயிகள் நெல் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அப்பகுதியில் மொத்தம் 16 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது இங்கு உள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நெல் மூட்டைகளை அரசு குடோனுக்கு ஏற்றிச்செல்ல 15 நாட்களுக்கு மேலாக லாரிகள் வராததால் இங்குள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் நெல் மூட்டைகளால் நிரம்பி வழிகிறது. இதனை கண்டித்து நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திருமானூர் பஸ் நிலையத்தில் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் இந்திரஜித் மற்றும் மாவட்ட செயலாளர் உலகநாதன் ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு எதிராக நடக்கும் ஊழல்கள் குறித்தும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களால் விவசாயிகள் படும் கஷ்டங்கள் குறித்தும் மற்றும் அதிகாரிகளை கண்டித்தும் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மணியன், ஒன்றிய துணை செயலாளர்கள் பன்னீர்செல்வம், கலியபெருமாள், பரிசுத்தம், ஒன்றிய பொருளாளர் மருதமுத்து உள்பட கட்சியின் நிர்வாகிகள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டு கொள்முதல் செய்யப்படாமல் பாதுகாப்பற்ற முறையில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்திடு, மேலும் அதற்கான உரிய தொகையை காலம் கடத்தாமல் வங்கி கணக்கில் செலுத்திடு என கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கொள்முதல் நிலையங்களில் பெறப்பட்ட நெல் மூட்டைகள் போதிய லாரிகள் வராததால் நாட்கணக்கில் தேங்கி கிடக்கிறது. மேலும் விவசாயிகள் தாங்கள் கொண்டு வரும் நெல்லை கொட்டுவதற்கு இடமில்லாமல் கொள்முதல் நிலையத்தின் வாசலிலும் அதன் சுற்றுப்புறங்களிலும், போக்குவரத்து நெடுஞ்சாலையிலும் கொட்டி வைத்து காத்துக்கிடக்கின்றனர்.
இதனால் தற்போது விவசாயிகளிடமிருந்து வாங்கும் நெல்லை எடைபோட்டு பார்ப்பதற்கு கூட இடமில்லாததால் பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டனர். இதனால் விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வந்த நெல்லை எங்கே வைப்பது, என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி வருகின்றனர். இதற்கு மாவட்ட அரசு உடனே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
Related Tags :
Next Story