மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பள்ளியை திறக்க விடாமல் பொதுமக்கள் போராட்டம்


மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பள்ளியை திறக்க விடாமல் பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 17 March 2020 11:30 PM GMT (Updated: 17 March 2020 8:15 PM GMT)

வேடசந்தூர் அருகே மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியை திறக்க விடாமல் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே உள்ள ஆர்.கோம்பையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 190-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு கணித ஆசிரியராக செந்தில்குமார் (வயது 51) பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி மாணவ-மாணவிகளிடம் ஆபாச வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. இதையொட்டி சக ஆசிரியர்கள் அவரை கண்டித்ததாக தெரிகிறது. ஆனால் அவர் அதனை பொருட்படுத்தவில்லை.

இதுகுறித்து மாணவ, மாணவிகள் தலைமை ஆசிரியர் சுப்புராஜனிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் எரியோடு போலீசில் சுப்புராஜன் புகார் செய்தார். அதன்பேரில் மாணவ, மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய செந்தில்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

போராட்டம்

இதுகுறித்து தகவல் அறிந்த செந்தில்குமார் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையில் நேற்று காலை வழக்கம்போல பள்ளியை திறக்க தலைமை ஆசிரியர் சுப்புராஜன் வந்தார். அப்போது ஆர்.கோம்பையை சேர்ந்த பொதுமக்கள் சிலர் பள்ளியை திறக்க விடாமல் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தலைமை ஆசிரியர் பள்ளியை திறக்காமல் திரும்பி சென்றார்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், செந்தில்குமார் நேர்மையான ஆசிரியர். அவர் மீது வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சி காரணமாக பள்ளி தலைமை ஆசிரியர் புகார் செய்துள்ளார். எனவே ஆசிரியர் செந்தில்குமாரை கைது செய்தால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். எங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம்’ என்றனர்.

Next Story