கோவையில், கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற தாய்லாந்து மீனவர் திடீர் சாவு


கோவையில், கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற தாய்லாந்து மீனவர் திடீர் சாவு
x
தினத்தந்தி 18 March 2020 4:30 AM IST (Updated: 18 March 2020 2:07 AM IST)
t-max-icont-min-icon

கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த மீனவர் திடீரென இறந்தாா்.

கோவை,

தாய்லாந்து நாட்டை சேர்ந்த 8 பேர் கொண்ட குழுவினர் இந்தியாவில் உள்ள பள்ளிவாசல்களை சுற்றிப்பார்க்க கடந்த 15 நாட்களுக்கு முன்பு டெல்லி வந்தனர். அங்குள்ள பள்ளிவாசல்களை பார்வையிட்ட பின்னர் அவர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னை வந்தனர். சென்னையில் சுற்றிப்பார்த்த அவர்கள் கடந்த 14-ந்தேதி கார் மூலம் ஈரோடு வந்தனர்.

ஈரோட்டில் இருந்த போது 8 பேரில் ஒருவரான டான் ரசாக் (வயது 49) என்பவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை தாய்லாந்துக்கு அனுப்புவதற்காக கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு சென்று பின்னர் அங்கிருந்து தாய்லாந்து புறப்பட ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

திடீர் சாவு

அதன்படி 15-ந் தேதி அவரை கோவை விமான நிலையம் அழைத்து வந்தனர். அங்கு இருந்த மருத்துவ குழுவினர் டான் ரசாக்கை சோதனை செய்தனர். அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கலாம் என்று சந்தேகித்தனர். இதைத்தொடர்ந்து அவர் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. பின்னர் அவரை அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அமைக்கப்பட்டு உள்ள கொரோனா தனி வார்டில் டான் ரசாக்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவரது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சென்னையில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தது. அத்துடன் அவருக்கு சர்க்கரை நோய் காரணமாக காலில் புண் இருந்தது. மேலும் அவருக்கு 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் இரவு அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த டான் ரசாக் நேற்று காலை 8.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி திடீரென இறந்தார்.

உடல் ஒப்படைப்பு

இதுகுறித்து அவருடன் வந்த குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதற்கிடையே அந்த குழுவினருக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவா்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் ஒருவர் மட்டும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று வந்தார். பின்னர் அவர் டான் ரசாக் இறந்தது குறித்து தாய்லாந்தில் உள்ள உறவினர்களிடம் போனில் தொடர்புகொண்டு பேசினார். அதில் அவரின் உடலை கோவையிலேயே அடக்கம் செய்யக்கோரி அவர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

இதையடுத்து அவாின் உடல் தாய்லாந்து குழுவை சேர்ந்தவரிடம் ஒப்படைக்கப்பட்டு, இஸ்லாமிய அமைப்புகளின் உதவியுடன் கோவையில் அடக்கம் செய்யப்பட்டது. டான் ரசாக் தாய்லாந்து நாட்டில் மீனவராக இருந்தது குறிப்பிடத்தக்கது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் சிறுநீரக கோளாறு காரணமாக இறந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டீன் பேட்டி

இதுகுறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

டான் ரசாக் கொரோனா வைரஸ் அறிகுறி என்ற சந்தேகத்துடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடலில் சர்க்கரை அளவு அதிகம் இருந்தது. பின்னா் அவாின் ரத்தம், சளி ஆகியவை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா அறிகுறி இல்லை என்று வந்தது.

இதற்கிடையே சர்க்கரை நோய் அதிகரித்து ரத்தத்தில் உப்புச்சத்து அதிகளவு சேர்ந்ததால் 2 சிறுநீரகங்களும் செயல் இழந்து விட்டன. இருப்பினும் அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்து உயிரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர முயற்சி செய்தார்கள். ஆனாலும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டார்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story