ஆரணியில் உணவு பாதுகாப்பு உரிமம் பெறுதல், புதுப்பித்தல் சிறப்பு முகாம்
ஆரணியில் உணவு பாதுகாப்பு உரிமம் புதுப்பித்தல், புதிய உரிமம் பெறுதல் முகாம் நடந்தது.
ஆரணி,
ஆரணி தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஆரணி எம்.ஜெ. மகாலில் உணவு பாதுகாப்பு உரிமம் புதுப்பித்தல், புதிய உரிமம் பெறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவி, ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் வி.கே.சர்மா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாவட்ட தலைவர் எல்.குமார் கலந்து கொண்டு பேசினார்.
இதில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பாக ஓட்டல்கள், டீ, பேக்கரி கடைகள், மளிகை கடைகள், குளிர்பான கடைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகஸ்தர்கள் சங்கம், காய்கறி வியாபாரிகள் சங்கம், நுகர்பொருள் விற்பனையாளர்கள் என பல்வேறு துறை சம்பந்தப்பட்ட வியாபாரிகள் பலரும் கலந்து கொண்டு ஏற்கனவே பெறப்பட்ட உணவு பாதுகாப்பு உரிமத்தை புதுப்பித்தனர். உரிமம் பெறாத கடைக்காரர்கள் புதிய உரிமம் பெறுவதற்கான விண்ணப்ப படிவங்களை வழங்கினர்.
முகாமில் கலந்து கொண்ட அனைத்து வியாபாரிகளுக்கும் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் செந்தில்குமார் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்து விழிப்புணர்வு வழங்கி பேசினார். மேலும் வந்திருந்த அனைவருக்கும் கை கழுவுதல் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட செயலாளர் பக்ருதீன், பொருளாளர் முருகானந்தம், குளிர்பான உற்பத்தியாளர்கள், நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கத்தை சேர்ந்த பாண்டியன், முன்னாள் தலைவர் ஏ.ஜி.எஸ்.சேகர், காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் ஏ.எஸ்.கே.சாதிக்பாஷா, தேவிகாபுரம் வர்த்தகர்கள் சங்கத்தினர், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story