வாணியம்பாடியில் 31-ந் தேதி வரை குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் நிறுத்தம்: எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


வாணியம்பாடியில் 31-ந் தேதி வரை குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் நிறுத்தம்: எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 March 2020 10:45 PM GMT (Updated: 18 March 2020 12:09 AM GMT)

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்பதற்காக குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் வருகிற 31-ந் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டது. அதற்கு எதிராக இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாணியம்பாடி, 

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராகவும் அதனை வாபஸ் வாங்க வலியுறுத்தியும் வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் ‘ஜாயின்ட் ஆக்சன்’ கமிட்டி சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வந்தன. இந்த போராட்டம் 28-வது நாளாக நீடித்தது. இந்த நிலையில் உலகம் முழுவதும் கொேரானா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இதனை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட தமிழக அரசு மக்கள் அதிகமாக கூடும் சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பள்ளி கல்லூரிகளை மார்ச் 31-ந் தேதி வரை மூட உத்தரவிட்டது. எனவே அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்து வந்த போராட்டத்தை 31-ந் தேதி வரை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சிறப்பு பிரார்த்தனை நடத்தி போராட்டத்தை தற்காலிகமாக ஏற்பாட்டாளர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும் மார்ச் 31-ந் தேதிக்குள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவில்லை யென்றால் ஏப்ரல் 1-ந் தேதி முதல் மீண்டும் போராட்டம் தொடரும் எனவும், மார்ச் 31-ந் தேதி வரை அனைத்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டபோது அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் சிலர் போராட்டத்தை நிறுத்தக் கூடாது என்றும் போராட்டக்குழு உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story