கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு மருத்துவமனையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது; கலெக்டர் தகவல்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு மருத்துவமனையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் வேங்கிக்காலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இணைந்து இதனை நடத்தியது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அரவிந்தன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கைகளை கழுவும் முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘கைகளை நன்றாக கழுவ குறைந்தது 30 வினாடிகள் தேவைப்படும். முதலில் கைகளை தண்ணீரில் ஈரப்படுத்த வேண்டும். அதன்பின் தாராளமாக கை முழுவதும் சோப் போட்டு கையோடு கை சேர்த்துத் தேய்த்து கழுவ வேண்டும். மேலும் வலது விரல்களை இடது விரல் இடுக்குகளில் தேய்க்க வேண்டும். கைகளை விரல் பின் பாகங்களை இடுக்கிவிட்டுத் தேய்க்க வேண்டும். கட்டை விரலை சுழற்றி இருகைகளையும் தேய்க்க வேண்டும். அதன்பின்னர் தண்ணீரில் நன்கு கைகளை அலம்ப வேண்டும்’’ என்றார். தொடர்ந்து கலெக்டர் முன்னிலையில் பஸ்களில் கிருமினி நாசினி தண்ணீர் தெளிக்கப்பட்டது. அப்போது பஸ்சில் இருந்த பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்ட 4 ஆயிரத்து 261 கிராமங்களில் 910 தினக்கூலி பணியாளர்கள், 3 ஆயிரத்து 245 தூய்மை காவலர்கள், 1,040 துப்புரவு பணியாளர்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 195 பணியாளர்களும், நகராட்சி நிர்வாகம் மூலமாக 4 நகராட்சிகளில் மொத்தம் 255 பணியாளர்களும் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்தவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், ஊராட்சி செயலாளர் உமாபதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், டாக்டர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story