காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா; ஏராளமான பக்தர்கள் தரிசனம்


காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா; ஏராளமான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 19 March 2020 3:00 AM IST (Updated: 19 March 2020 1:59 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காரைக்குடி, 

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி திருவிழா கடந்த 10-ந் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 41 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் நேற்று முன்தினம் கரகம், மதுக்குடம், முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் நகரின் பல்வேறு கோவில்களில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 9-ம் திருநாளான நேற்று பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

முன்னதாக பக்தர்கள் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வந்தனர். இதுதவிர பறவைக் காவடி, வேல் காவடி உள்ளிட்டவைகளை பக்தர்கள் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் கொண்டு வந்த பால் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த ராட்சத தொட்டியில் ஊற்றப்பட்டது. பின்னர் மோட்டார் மூலம் பால் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் வந்து விழாவில் கலந்துகொண்டனர். பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. அவரச உதவிக்கு மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

விழாவையொட்டி நகராட்சி ஆணையாளர் மாலதி மேற்பார்வையில், சுகாதாரப் பிரிவினர் சுகாதார பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் தலைமையில் போலீசார் மற்றும் சிறப்பு காவல்படையினர், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால், தக்கார் சிவலிங்கம், செயல் அலுவலர் சுமதி, கணக்காளர் அழகு பாண்டி மற்றும் அதிகாரிகள் குழுவினர் செய்திருந்தனர்.

Next Story