ரெயில்வே கேட்டை மூடியதற்கு எதிர்ப்பு; மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களால் பரபரப்பு


ரெயில்வே கேட்டை மூடியதற்கு எதிர்ப்பு; மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 March 2020 10:15 PM GMT (Updated: 19 March 2020 3:30 PM GMT)

நமணசமுத்திரம் அருகே ரெயில்வே கேட்டை மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ரெயில் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருமயம், 

புதுக்கோட்டையில் இருந்து திருமயம் செல்லும் ரெயில்வே பாதையில் நமணசமுத்திரம் அருகே ஒரு ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட்டை கடந்துதான் தேக்காட்டூர், ராயவரம், செங்கீரை, கடியாபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்ல முடியும். மேலும் இந்த கேட்டை கடந்து தான் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சுடுகாட்டிற்கும் செல்ல வேண்டும். மேலும் சில பஸ்களும் இந்த ரெயில்வே கேட்டின் வழியாக சென்று வருகின்றன.

இந்நிலையில் ஆள் பற்றாக்குறையாலும், ஆளில்லா ரெயில்வே கேட்டை மூடும் நடவடிக்கையிலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த ரெயில்வே கேட்டை ரெயில்வே நிர்வாகம் மூடியது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ரெயில்வே கேட் மூடப்பட்டதால், பல கிராமங்களுக்கு சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி தான் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து மூடப்பட்ட ரெயில்வே கேட்டை திறக்க வழிவகை செய்ய வேண்டும் எனக்கூறி கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உமா மகேஸ்வரி ரெயில்வே கேட்டை திறக்க உத்தரவிட்டார். ஆனால் சம்பந்தப்பட்ட ரெயில்வே நிர்வாகம் கலெக்டரின் உத்தரவை மீறி, தற்போது வரை கேட்டை திறக்காமல் மூடி வைத்து உள்ளது. எனவே உடனடியாக இந்த கேட்டை திறக்க வேண்டும் எனவும், கலெக்டரின் உத்தரவை மதிக்காத ரெயில்வே நிர்வாக அதிகாரியை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து நமணசமுத்திரத்தில் கடையடைப்பு செய்து, ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருமயம் தாசில்தார் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் மூடப்பட்ட ரெயில்வே கேட்டை திறக்க மீண்டும் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்றார். இதையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட்ட முயன்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு, கலெக்டர் உமா மகேஸ்வரிடம் ரெயில்வே கேட்டை திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர். மேலும் மூடிய கேட் உடனடியாக திறக்கப்பட வேண்டும். இல்லையென்றால் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என ரெயில் மறியலில் ஈடுபட முயன்றவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story