மேட்டூர் அணை நீர்மட்டம் 103.81 அடியாக குறைந்தது


மேட்டூர் அணை நீர்மட்டம் 103.81 அடியாக குறைந்தது
x
தினத்தந்தி 20 March 2020 5:00 AM IST (Updated: 20 March 2020 1:45 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.81 அடியாக குறைந்தது.

மேட்டூர்,

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தற்போது தொடங்கி உள்ளது. பிரதான அணைகள், ஏரிகள், குளங்களில் வெயிலின் தாக்கத்தாலும், குடிநீர் தேவை அதிகரிப்பாலும் நீர்மட்டம் குறைய தொடங்கி உள்ளது.

அதே நேரத்தில் தமிழகத்தின் 12 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக கடந்த பிப்ரவரி மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. குறிப்பாக குடிநீர் தேவைக்கு ஏற்றவாறு அதிகரித்தோ, குறைத்தோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவது வழக்கம்.

இதன் அடிப்படையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அணையில் இருந்து வினாடிக்கு 2000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஒரு சில நாட்களில் தண்ணீர் திறக்கும் அளவு வினாடிக்கு 1,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 150 கனஅடிக்கு கீழே தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

டெல்டா பாசனம்

குறிப்பாக பருவமழை காலம் முடிவடைந்த பிறகு அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் ஜனவரி மாதத்துடன் நிறுத்தப்படும். இந்த காலங்களில் அணையின் நீர் இருப்பு மிக குறைவாக அதாவது 60 அடிக்கு கீழே இருப்பது வழக்கம்.

இந்த ஆண்டு அதற்கு மாறாக அணை நீர்மட்டம் 100 அடிக்கு மேலே நீடித்து வருகிறது. இதனால் இந்த ஆண்டு டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் ஜூன் மாதத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் நன்றாகவே உள்ளது.

103.81 அடியாக குறைந்தது

இருப்பினும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 105 அடிக்கும் மேல் இருந்த அணையின் நீர்மட்டம் குடிநீர் தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறப்பு மற்றும் அணைக்கு நீர்வரத்து குறைவு காரணமாக தொடர்ந்து குறைந்து வருகிறது.

குறிப்பாக நேற்று முன்தினம் 103.89 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 103.81 அடியாக குறைந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 132 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Next Story