மதுரை விமான நிலையம் அருகே கொரோனா பரிசோதனை கூடம் அமைக்க எதிர்ப்பு; கிராம மக்கள் போராட்டம் - 60 பேர் கைது
மதுரை விமான நிலையம் அருகே கொரோனா மருத்துவ பரிசோதனை கூடம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 60 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை,
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை பரிசோதனை செய்ய விமான நிலையங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு உள்ளனர்.
மதுரை விமான நிலையத்திலும் இதுபோல், சுகாதாரத்துறை அதிகாரிகள் பணியில் இருக்கின்றனர். அவர்கள், வெளிநாடுகள், வெளிமாநிலத்தில் இருந்து வருவோருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என்பது குறித்து பரிசோதித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கொரோனா அறிகுறியுள்ள நபர்களை கட்டுப்பாட்டில் வைத்து கண்காணிப்பதற்காக மதுரை விமான நிலையம் அருகே உள்ள சின்னஉடைப்பு கிராமத்தில் தற்காலிகமாக 130 படுக்கை வசதிகளுடன், தனி பரிசோதனை கூடம் அமைக்கும் பணியில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த மருத்துவ கூடத்துக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே நேற்று காலையில் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திடீரென அங்குள்ள சாலையில் திரண்டனர்.
பின்னர் அவர்கள் மரத்தடிகளை போட்டும், மறியல் செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சின்ன உடைப்பு கிராமத்தில் தற்காலிக மருத்துவ பரிசோதனை கூடம் அமைந்தால் தங்களது கிராம மக்களுக்கு கொரோனா பாதிப்பு வரும் வாய்ப்பு உள்ளது எனவும், இந்த கூடத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் நேற்று மாலை வரை நீடித்தது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, “சின்ன உடைப்பு கிராமத்தில் மத்திய கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையம் இருக்கும் இடத்தில் இந்த பரிசோதனை கூடம் அமைக்க அரசு இடம் தேர்வு செய்துள்ளது.
அந்த இடத்தில் கொரோனா பரிசோதனை கூடம் அமைத்தால் கொரோனா வைரஸ் எங்கள் கிராமத்தினருக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது என்பதால் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். எனவே இடத்தை மாற்றும் வரை போராட்டம் தொடரும்” என்றனர்.
Related Tags :
Next Story