கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்; நகை-ஜவுளிக்கடைகள் அடைக்கப்பட்டன
மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் நகை-ஜவுளிக் கடைகள் அடைக்கப்பட்டன.
கரூர்,
சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்தியாவில் மத்திய-மாநில அரசுகள் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கரூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், 6 படுக்கைகளுடன் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப் படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில் தனிவார்டு தயார் நிலையில் உள்ளது. இதற்கென டாக்டர்கள், நர்சுகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி கரூர் அரசு மருத்துவமனையில் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நபர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதி உள்பட அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய சிறப்பு மருத்துவப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறப்பு மருத்துவப்பிரிவினை மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து கலெக்டர் அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில், கரூரை சேர்ந்த 42 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தபோது, அவர்களுக்கு திருச்சி விமானநிலையத்திலேயே பரிசோதனை செய்து, சுகாதாரத்துறையால் கண்காணிக்கப்பட்டு வைரஸ் தொற்று ஏதுமில்லை என உறுதிசெய்யப்பட்டு விட்டது. எனவே வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். ஆய்வின்போது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரோஸிவெண்ணிலா, கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, இருக்கை மருத்துவர் முருகராஜ், கரூர் வட்டாட்சியர் அமுதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கரூர் அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில், காவலாளி ஒலிபெருக்கியை கையில் பிடித்து கொண்டு, கொரோனா பாதிப்பு பற்றி எடுத்துக்கூறி அனைவரும் கைகளை கழுவிய பின்னரே உள்ளே செல்ல வேண்டும் என அறிவுறுத்தி வருகிறார். இதனால் மருத்துவனைக்கு வருகிற மக்கள் நீண்ட வரிசையில் நின்று கைகளை கழுவிய பிறகே உள்ளே செல்கின்றனர். மாவட்ட கலெக்டர் அன்பழகன், கைகழுவும் இடத்தை பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவுறுத்தியதன் பேரில் நேற்று, கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், தாந்தோணிமலை வெங்கடரமண சாமி கோவில், கரூர் மாரியம்மன்கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் பூட்டப்பட்டன. அங்கு சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மாறாக ஆகமவிதிப்படி பூஜைகள் மட்டும் சாமிக்கு வழக்கம்போல் நடத்தப்பட்டன. எனினும் சில பக்தர்கள் கோவிலின் வெளிபுறத்தில் நின்று சாமியை வேண்டி சென்றதை காண முடிந்தது.
கரூர் உழவர் சந்தைக்கு வெள்ளியணை, தாந்தோணிமலை, உப்பிடமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கிராம மக்கள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை நேரடியாக பறித்து கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டிலிருந்து யாரும் வெளியே வரவேண்டாம் என பிரதமர் மோடி அறிவித்தார். இதன் எதிரொலியாக கரூர் உழவர் சந்தையில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு சமையலுக்கு தேவையான காய்கறிகளை பொதுமக்கள் தேடிப்பிடித்து வாங்கி சென்றதை காண முடிந்தது. உழவர் சந்தையில் விற்பனை நேரம் முடிவடைந்ததும், அங்கு கரூர் நகராட்சி துப்புரவு பணியாளர் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல் காமராஜர் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களிலும் காய்கறி விற்பனை படுஜோராக நடந்தது.
கரூரில் உள்ள டெக்ஸ்டைல் ஜவுளி ஏற்றுமதி, கொசுவலை, பஸ் கூண்டு கட்டுவது உள்ளிட்ட நிறுவனங்களில் வெளியிடங்களில் இருந்து தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வருகிறார்கள். இதன் காரணமாக கரூர் பஸ் நிலையத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பொதுமக்கள், தொழிலாளர்கள் செல்லும் வகையில் போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவுதலை தடுக்கும் பொருட்டு பயணங்களை தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தப்பட்டு வருவதால் போக்குவரத்தினை மேற்கொள்வேரின் எண்ணிக்கை குறைந்தது நேற்று கரூர் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. வழக்கத்தை விட குறைவான பயணிகளே வந்து சென்றனர். கரூர் மண்டல போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்களில் கிருமிநாசினி தெளித்த பின்னரே பஸ் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசு அறிவுறுத்தியதன் பேரில் கரூர் ஜவகர்பஜார், கோவை ரோடு, பழைய பைபாஸ் ரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள ஜவுளிக்கடை, நகைக்கடை, பெரிய வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. இதனை அறியாமல் நகை, துணி எடுக்க வந்தவர்கள் கடை மூடப்பட்டிருப்பதை கண்டதும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கொரோனா வைரஸ் எதிரொலியாக குளித்தலை காவிரி நகர் பகுதியில் காய்கறி சந்தை நேற்று நடைபெறுவதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் தடைவிதிக்கப்பட்டது. மேலும் வியாபாரிகள் யாரும் கடைகள் போடாதவாறு நகராட்சி சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். சந்தையை நம்பி வியாபாரம் செய்யும் தங்களுக்கு பெரிதும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதேபோல வாரம் ஒருமுறை காய்கறிகள் வாங்கி பயன்படுத்தும் பொதுமக்களுக்கு, சந்தை இல்லாத காரணத்தால் தங்கள் வீட்டிற்கும் தேவையான காய்கறிகளை வாங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. குளித்தலை நகரப்பகுதியில் உள்ள பல்வேறு வகையான கடைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் அவர்களின் கைகளை கழுவிக்கொள்ளும் வகையில், கைகழுவ தேவையான ஏற்பாடுகளை அந்தந்த கடை உரிமையாளர்கள் செய்யவேண்டுமென நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் குளித்தலை கடம்பவனேசுவரர் கோவில், நீலமேகப்பெருமாள் கோவில், அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோவில் உள்பட அனைத்து கோவில்களும் வருகிற 31-ந்தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கம்போல் சுவாமிக்கு பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நொய்யல் அருகே உள்ள புன்செய்புகளூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளில் உள்ள கோவில்கள், பஸ் நிறுத்தங்கள், வணிகவளாகங்கள், திருமண மண்டபங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், பொதுக்கழிப்பிடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், பேரூராட்சி சாலைகள் வழியாக செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்களில் நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியமூர்த்தி தலைமையில், பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர். மேலும் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களும் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story