கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கோவில்களில் நடை அடைப்பு


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கோவில்களில் நடை அடைப்பு
x
தினத்தந்தி 21 March 2020 3:00 AM IST (Updated: 21 March 2020 2:08 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க காங்கேயம், வெள்ளகோவில் பகுதிகளில் உள்ள கோவில்களில் நடை அடைக்கப்பட்டது.

வெள்ளகோவில், 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வருகிற 31-ந்தேதி வரை பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும்படி அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது. இதைதொடர்ந்து பக்தர்கள் கூடுவதை தவிர்க்க கோவில்களில் நடை அடைக்கப்பட்டு பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகின்றன.

அதன்படி வெள்ளகோவிலில் பிரசித்தி பெற்ற வீரக்குமாரசாமி கோவிலில் நேற்று கோவில் நடை அடைக்கப்பட்டது. தினமும் நடைபெறும் பூஜைகள் மட்டும் நடைபெற்றன. பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. வழக்கமாக நடைபெறும் அன்னதானம் பொட்டலம் கட்டி கோவிலுக்கு வெளியே நின்றிருந்த பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

இதே போல சோழீஸ்வரர் கோவில், வரதராஜபெருமாள் கோவில் நடைகளும் சாத்தப்பட்டன. கோவிலை சுற்றி இருந்த பூக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

காங்கேயம் அருகே சிவன்மலையில் உள்ள புகழ்பெற்ற சுப்பிரமணியசாமி மலைக்கோவிலும் நேற்று முதல் நடை அடைக்கப்பட்டது. வருகிற 31-ம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

மலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு வாகனங்கள் மூலம் செல்லும் சாலையும், படி ஏறிச்செல்வதற்கான பாதையும் நேற்று மூடப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு பலகையும் கோவில் நுழைவுவாயில் முன்பு வைக்கப்பட்டுள்ளது. சிவன்மலை முருகன் மலைக்கோவிலில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும், கோவிலில் பூஜைகள் வழக்கம் போல நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் காங்கேயம் பகுதியில் உள்ள பரஞ்சேர்வழி கரியகாளியம்மன் கோவில், பாப்பினி பெரியநாயகியம்மன் கோவில், காடையூர் காடையீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்களுக்கு வருகிற 31-ந் தேதிவரை அனுமதியில்லை எனவும், அதே நேரம் பூஜைகள் முறையாக நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் எதிரொலியால் குண்டடம் நகரில் பிரசித்தி பெற்ற காலபைரவ வடுகநாதசாமி கோவில், அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் வருகிற 31-ந்தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு கோவில் முன்பு வைக்கப்பட்டுள்ளது. தாராபுரம் காடு அனுமந்தராய சுவாமி கோவிலுக்கு நேற்று முதல் வருகிற 31-ந்தேதி வரை பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சாமிக்கு ஆகம விதிப்படி அனைத்து பூஜைகளும் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தொிவித்து உள்ளது.

Next Story