ஊரடங்கையொட்டி கடைகள், மார்க்கெட்டுகள், உழவர் சந்தைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது


ஊரடங்கையொட்டி கடைகள், மார்க்கெட்டுகள், உழவர் சந்தைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 21 March 2020 10:30 PM GMT (Updated: 21 March 2020 3:23 PM GMT)

கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டர் சாந்தா தலைமையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஏராளமானோர் கொரோனா வைரசுக்கு பயந்து முககவசம் அணிய தொடங்கி விட்டனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் முககவசம் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் கைகளை கழுவும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டு வருகிறது. 

பெரம்பலூர் மாவட்டத்தில் கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் வருகிற 31-ந்தேதி வரை மூடப்படுகிறது. நேற்று கிறிஸ்தவ ஆலயங்கள் திறக்காததால், ஆலயம் முன்பு கிறிஸ்தவர்கள் வந்து பிரார்த்தனையில் ஈடுபட்டு சென்றனர். இதே போல் கோவில்கள் திறக்கப்படாததால், பக்தர்கள் கோவிலின் முன்பு சூடம் ஏற்றி வழிபாடு நடத்தி சென்றதை காணமுடிந்தது. அதேநேரத்தில் மாவட்டம் முழுவதும் தூய்மை பணியாளர்களை கொண்டு துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் அறிவித்துள்ளார். அதுமட்டு மின்றி இன்று பஸ்கள் ஓடாது. இதன்காரணமாக நேற்று பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதே போல் காய்கறி மார்க்கெட், சூப்பர் மார்க்கெட், கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்படுவதால், அங்கு பொருட்கள் வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையில் உள்ள உழவர் சந்தையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை மூட கலெக்டர் சாந்தா உத்தரவிட்டதால், உழவர் சந்தையிலும் காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

பொதுமக்கள் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர். மேலும் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ மாரியம்மன் தினசரி காய்கறி மார்க்கெட்டிலும் கூட்டம் அலைமோதியது.

Next Story