இன்று மக்கள் ஊரடங்கு உத்தரவு: சேலத்தில் உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது


இன்று மக்கள் ஊரடங்கு உத்தரவு: சேலத்தில் உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 22 March 2020 5:30 AM IST (Updated: 22 March 2020 2:09 AM IST)
t-max-icont-min-icon

இன்று மக்கள் ஊரடங்கு உத்தரவு அமலை தொடர்ந்து நேற்று சேலத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

சேலம்,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. தமிழக எல்லைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

கூட்டம் அலைமோதியது

இதையொட்டி லாரிகள், பஸ்கள், ரெயில்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தைகளும் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று சேலத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகள் மற்றும் உழவர் சந்தைகளில் கூட்டம் அலைமோதியது. ஆற்றோர காய்கறி மார்க்கெட்டிற்கு அதிகாலையிலேயே வழக்கத்தை விட ஏராளமானவர்கள் குவிந்தனர். இதனால் வியாபாரம் மும்முரமாக நடந்தது. செவ்வாய்பேட்டையில் உள்ள மார்க்கெட்டிற்கும் பலர் வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர்.

இதேபோல் மாநகரில் உள்ள அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, தாதகாப்பட்டி, சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகளில் கூட்டம் அலைமோதியது. மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளிலும் பொதுமக்கள் அதிகம் பேர் வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர்.

பூ மார்க்கெட்

மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளில் நேற்று மட்டும் ரூ.72 லட்சத்து 92 ஆயிரத்து 347-க்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர். உழவர் சந்தைகளில் விவசாயிகள் மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளில் வியாபாரிகள் பலர் முகக்கவசம் அணிந்து கொண்டு வியாபாரம் செய்தனர்.

சேலம் கடைவீதியில் உள்ள வ.உ.சி. பூ மார்க்கெட்டிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து இன்று பூ மார்க்கெட் செயல்படாது என்று வ.உ.சி. பூ மார்க்கெட் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் ஆர்.எம்.ராஜீ தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள்

இதேபோல் மாவட்டத்தில் உள்ள 221 டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்படுகின்றன. இதனால் நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. மதுபான பிரியர்கள் கூடுதலாக மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில நாட்களாகவே சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. இதனால் ராமகிருஷ்ணா சாலை, கலெக்டர் அலுவலக சாலை உள்ளிட்டவை வெறிச்சோடி காணப்பட்டன.

Next Story