சென்னையில் பயங்கரம் பாலியல் துன்புறுத்தல் செய்து 10 வயது சிறுமி கொலை 2-வது மாடியில் இருந்து கீழே வீசிய தொழிலாளி கைது


சென்னையில் பயங்கரம் பாலியல் துன்புறுத்தல் செய்து 10 வயது சிறுமி கொலை 2-வது மாடியில் இருந்து கீழே வீசிய தொழிலாளி கைது
x
தினத்தந்தி 22 March 2020 5:45 AM IST (Updated: 22 March 2020 3:13 AM IST)
t-max-icont-min-icon

10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து 2-வது மாடியில் இருந்து கீழே வீசி கொலை செய்த கட்டிடத்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை மதுரவாயல் பகுதியில் அடுக்குமாடி வீட்டின் முதல் தளத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகள், தங்களது 10 வயது மகளுடன் வசித்து வந்தனர். அந்த சிறுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.

நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே உள்ள கழிவறைக்கு சென்ற சிறுமி, நீண்டநேரம் ஆகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவளது பெற்றோர், கழிவறைக்கு சென்று பார்த்தனர். அங்கு சிறுமி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த தெரு முழுவதும் தேடியும் மகளை காணாததால் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மாயமான சிறுமியை தேடினர்.

பிணமாக கிடந்தாள்

இதற்கிடையில் சந்தேகத்தின்பேரில் சிறுமியின் பெற்றோர், வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தனர். அங்கேயும் இல்லாததால் அந்த வீட்டின் பின்பகுதியில் உள்ள காலி இடத்தில் ‘டார்ச் லைட்’ அடித்து பார்த்தனர். அங்கு மாயமான சிறுமி, ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் உதவியுடன் சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கட்டிடத்தொழிலாளி கைது

முதல் தளத்தில் உள்ள கழிவறைக்கு சென்ற சிறுமி, எப்படி மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து இருக்க முடியும்? என்ற சந்தேகத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அதே வீட்டின் 2-வது தளத்தில் வசித்து வந்த கட்டிடத்தொழிலாளி சுரேஷ்(30) என்பவரிடம் சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர்.

அதில் அவர், சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன், வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே வீசி கொலை செய்ததாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தினர்.

2-வது மாடியில் இருந்து வீசி கொலை

திண்டிவனத்தை சேர்ந்தவரான சுரேஷ், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டில் வாடகைக்கு குடிவந்தார். அந்த வீட்டுக்கு எதிரே புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் கட்டிட வேலை செய்து வந்தார். மனைவி என்று கூறி பெண் ஒருவரும் அவருடன் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு போதையில் இருந்த சுரேஷ், உடன் தங்கியிருந்த பெண்ணை கொளத்தூர் அனுப்பிவிட்டு, வீட்டின் படிக்கட்டில் அமர்ந்து செல்போனில் ஆபாச படம் பார்த்து கொண்டிருந்தார். அப்போது கழிவறைக்கு செல்ல வந்த சிறுமியை, நைசாக பேசி 2-வது மாடியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச்சென்றார்.

அங்கு சிறுமியின் வாயை பொத்தி, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் மூச்சுத்திணறிய சிறுமி மயங்கினாள். தட்டிப்பார்த்தும் சிறுமி எழுந்திருக்கவில்லை. இது வெளியில் தெரிந்தால் போலீசாரிடம் மாட்டிக்கொள்வோம் என்று பயந்த சுரேஷ், சிறுமியை மொட்டை மாடிக்கு தூக்கிச்சென்று அங்கிருந்து கீழே தூக்கி வீசிவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் தனது வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

சிறுமியே கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டதாக அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசார் நினைத்துக்கொள்வார்கள் என்று கருதி தூங்கிவிட்டார் என்பது அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

போக்சோ சட்டத்தில் வழக்கு

முன்னதாக சிறுமி மாயமானதை தொடர்ந்து அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அனைவரும் அந்த பகுதியில் தேடினர். ஆனால் சுரேஷ் மட்டும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டின் கதவை நீண்டநேரம் தட்டினர். அதன்பிறகு வெளியே வந்த சுரேஷ், சிறுமி மாயமானது குறித்து எதுவும் தெரியாததுபோல் நடித்து, தானும் மற்றவர்களுடன் சேர்ந்து சிறுமியை தேடுவது போல் நடித்தார்.

மேலும் ரத்த வெள்ளத்தில் சிறுமி கிடப்பதை கண்ட பிறகு சுரேசும், மற்றவர்களுடன் சேர்ந்து சிறுமியை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. கைதான சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

Next Story