ஈரோட்டில் மில்லில் பயங்கர தீ விபத்து; ரூ.1 கோடி நூல்-எந்திரங்கள் எரிந்து நாசம்
ஈரோட்டில் சைசிங் மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான நூல் மற்றும் எந்திரங்கள் எரிந்து நாசம் ஆனது.
ஈரோடு,
ஈரோடு 16 அடி ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 49). இவர் ஈரோடு சுக்கிரமணிய கவுண்ட வலசு பகுதியில் மாலினி என்ற பெயரில் சைசிங் மில் வைத்து நடத்தி வருகிறார். இங்கு நூல்களுக்கு பாவு (கஞ்சி) போடும் பணி நடக்கிறது. இந்த பணியில் 12 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள அனைத்து சாய -சலவை பட்டறைகள், சைசிங் மில்களை நேற்று மூட உத்தரவிடப்பட்டு இருந்தன.
அதனால் செல்வராஜ் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும் தனது சைசிங் மில்லை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று பகல் 11.15 மணி அளவில் அந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து பயங்கரமாக சத்தம் கேட்டது. சுய ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள் முடங்கி கிடந்த பொதுமக்கள் என்னவோ, ஏதோ என்று பதறியடித்தபடி வெளியில் ஓடிவந்து பார்த்தனர்.
அப்போது டிரான்ஸ்பார்மர் அருகில் உள்ள செல்வராஜின் சைசிங் மில்லில் இருந்து கரும்புகை வெளியேறி கொண்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் சைசிங் மில் தீப்பற்றி எரியத்தொடங்கியது. இதைப்பார்த்த பொதுமக்கள் இதுபற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் நிலைய அதிகாரி மயில்ராஜ் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் 3 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் சைசிங் மில்லில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது சைசிங் மில்லில் பாவு போட்டு வைக்கப்பட்டு இருந்த நூலும், பாவு போடும் எந்திரங்களும் கொழுந்து விட்டு எரிந்ததால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு படைவீரர்கள் திணறினர்.
மேலும் 3 தீயணைப்பு வானங்களில் கொண்டு வரப்பட்ட தண்ணீர் தீர்ந்தும் தீ கட்டுக்குள் வரவில்லை. அதைத்தொடர்ந்து அங்கு 2 லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, தீயணைப்பு படைவீரர்கள் தீயை அணைத்தனர். 20 பேர் கொண்ட குழுவினர் சுமார் 1½ மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும் சைசிங் மில்லில் வைக்கப்பட்டு இருந்த நூல், பாவு, எந்திரங்கள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதே மில்லில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நூல், பாவு, எந்திரங்கள் எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தீயணைப்பு அதிகாரிகள் கூறும்போது, ‘மின்கசிவு காரணமாக இந்த தீ விபந்து நடந்திருக்கலாம் என தெரிகிறது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளது’ என்றனர்.
இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story