திருப்பூரில் வறுமையால் சோக சம்பவம்: பெண் இறந்த வேதனையில் தந்தை,மகன் தூக்குப்போட்டு தற்கொலை
உடல்நிலை பாதிப்பால் இறந்த பெண்ணின் தந்தை மற்றும் அவரது மகன் ஆகியோர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். இது பற்றி திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வறுமையின் காரணமாக நடந்த சோக சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:-
நல்லூர்,
திருப்பூர் காங்கேயம் ரோடு ஜெய்நகரில் வசித்து வந்தவர் தேவராஜ். இவருடைய மனைவி அபர்ணா (வயது 45). இவர் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார். இவர்களுக்கு ஜித்தின் (17) என்ற மகன் இருந்தான். அபர்ணா பெற்றோருடன் வி.ஜி.வி.கார்டன் பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். அதன் பிறகு அந்த வீட்டை வறுமையின் காரணமாக விற்றுவிட்டு ஜெய்நகர் 3-வது குறுக்கு வீதியில் உள்ள ஒரு வீட்டின் கீழ் தளத்தில் அபர்ணா அவரது தந்தை வெள்ளியங்கிரி(70), மகன் ஜித்தினுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அபர்ணா பணியில் இருந்து நின்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் 11-ம் வகுப்பு படித்து வந்த மகன் படிப்பும் பாதியில் நின்றது. இதன் காரணமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு பள்ளிக்கு செல்வதை ஜித்தின் நிறுத்திக்கொண்டான். வருமானம் இன்றி மன உளைச்சலில் அபர்ணா உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி மகன் ஜித்தினுடன் அபர்ணா பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.
மகள் இறந்ததை அறிந்த வெள்ளியங்கிரி அன்றே அவரது அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தாய் மற்றும் தாத்தா இறந்த துக்கத்தில் என்ன செய்வதென அறியாமல் வீட்டிலேயே சிறுவன் ஜித்தின் தாய், தாத்தா பிணத்துடன் இருந்துள்ளான். பின்னர் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் தாத்தாவின் செல்போனை எடுத்து கோவையில் உள்ள மாமா வினோத்குமாருக்கு (48) போன் செய்து தாத்தாவும், அம்மாவும், இறந்து விட்டதாகவும் என்ன செய்வதென தெரியாமல் பயமாக இருக்கிறது எனவும், என்ன செய்வது என்று தெரியவில்லை என்று அழுதுகொண்டே போனில் தெரிவித்துள்ளான்.
சிறிது நேரத்தில் ஜித்தின் செல்போன் அணைக்கப்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன வினோத்குமார் திருப்பூர் பெரியார் காலனியில் உள்ள உறவினர் கண்ணன் என்பவருக்கு போன் செய்து அபர்ணா வீட்டிற்கு சென்று பாருங்கள் என தெரிவித்துள்ளார். வீட்டை கண்டுபிடித்த அவர் நேற்றுமுன்தினம் இரவு அந்த வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது தாத்தாவும், பேரனும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்துள்ளனர்.
இதுகுறித்து ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது முதல் அறையில் அபர்ணா பிணமாகவும், மற்றொரு அறையில் முதியவர் வெள்ளியங்கிரி தூக்கில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தனர். மற்றொரு அறையில் ஜித்தின் சேலையால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளான்.
3 பேரின் பிணங்களையும் கைப்பற்றிய போலீசார் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அபர்ணா வறுமையின் காரணமாக இறந்ததாக கூறப்படுகிறது. உறவினர், உற்ற நண்பர்கள் இல்லாமல் தனித்து வாழ்ந்து பழகி தாத்தா, தாய் இவர்கள் மட்டுமே உலகம் என சொல்லிக்கொடுத்ததால் தனிமையில் இருந்த ஜித்தின் இனி தனக்கு யாரும் இல்லை என நினைத்து தற்கொலை முடிவை எடுத்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story